சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.80-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70-க்கும் விற்பனை ஆகி வருகிறது.
வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ் கிலோ ரூ.140 வரையிலும், அவரைக்காய் மற்றும் முருங்கைக்காய் கிலோ ரூ.120வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது.
அங்குள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் செடிகள் பெரும்பாலும் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து வீணாகி போனது.
இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு கோயம்பேடு சந்தைக்கு வரும் பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து பாதியாக குறைந்து உள்ளதால் விலை அதிகரித்து உள்ளது என்றனர்.
கடந்த வாரம் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.50-க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ, ரூ.40-க்கும் அவரைக்காய் ஒரு கிலோ ரூ.20-க்கும் விற்கப்பட்ட நிலையில் அதன் விலை தற்போது 2 மடங்காக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்கயாம் ரூ.160-க்கும், பெரிய வெங்காயம் ரூ.80-க்கு விற்பனையாக தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.
தற்போது பச்சை காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.