கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டிற்கு திருநெல்வேலி, திண்டுக்கல், அரியலூர் ஆகிய பகுதிகள் மற்றும் மராட்டியம் மாநிலத்தில் இருந்து முருங்கைக்காய் தினசரி விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு முருங்கைக்காய் வரத்து பாதியாக குறைந்து விட்டது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ30-க்கு விற்ற முருங்கைக்காய் திடீரென ரூ.100-க்கு எகிறி உள்ளது. மேலும் கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ80-க்கு விற்ற பீன்சும் வரத்து குறைவால் ரூ150-க்கு அதிகரித்து உள்ளது. அவரைக் காய், நைஸ் கொத்தவரங்காய் மற்றும் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.70-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.60-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரத்தில் ரூ40-க்கு விற்ற தக்காளி விலை குறைந்து ரூ.30-க்கும் மொத்த விற்பனையில் விற்பனை ஆகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.180 வரையிலும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150வரையிலும், அவரைக்காய், நைஸ் கொத்தவரங்காய் மற்றும் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.100 வரை விலை அதி கரித்து விற்கப்படுகிறது. காய்கறி விலை அதிகரித்து உள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.