வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ், கேரட் விலை ஒரு கிலோ ரூ.120வரை விற்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் நள்ளிரவு முதல் செயல்பட தொடங்கிய மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. வழக்கமாக தினசரி 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் குவிந்து வரும் காய்கறி வரத்து இன்று 400 லாரிகளாக குறைந்தது.
தீபாவளியை கொண்டாட விடுமுறையில் சென்ற விவசாய மற்றும் கூலி தொழிலாளர்கள் முழு அளவில் வேலைக்கு திரும்பாததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது. இதனால் நேற்று முன்தினம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.30 வரை விற்கப்பட்ட ஊட்டி கேரட் ரூ.80-க்கும், ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற பீன்ஸ் ரூ80-க்கும் விற்பனை ஆனது.
இதேபோல் ஒரு கிலோ ரூ.130வரை விற்ற சின்ன வெங்காயம் மேலும் அதிகரித்து ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ், கேரட் விலை ஒரு கிலோ ரூ.120வரை விற்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-
வெங்காயம்- ரூ.40முதல் ரூ.60வரை, தக்காளி ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.50, பாகற்காய் ரூ.50, அவரைக் காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20, வெண்டைக்காய்-ரூ.10.