தமிழக செய்திகள்

6 ஆண்டுகளாக மக்களை அச்சுறுத்திய ராட்சத முதலை சிக்கியது

300 கிலோ எடை கொண்ட அந்த ராட்சத முதலை வலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்று பயங்கர சத்தம் எழுப்பியது.

குமரி மாவட்டம் கடையாலு மூடு அருகே கோதை ஆற்றில் 6 ஆண்டுகளாக மக்களை அச்சுறுத்திய 300 கிலோ எடையுடைய ராட்சத முதலை, வனத்துறையினர் திட்டமிட்ட வலையில் இறுதியாக சிக்கியது. சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவால் அச்சமடைந்த பொதுமக்கள், முதலை பாதுகாப்பாக பிடிக்கப்பட்டதால் நிம்மதி அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டம் கடையாலு மூடு அருகே கோதை ஆற்றில் கடந்த 6 ஆண்டுகளாக முதலை நடமாட்டம் இருந்தது. அப்பகுதியில் உள்ள உறைகிணற்றின் மீது முதலை படுத்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்த பொது மக்கள் அச்சமடைந்தனர்.

வலை விரித்தனர்

இதனை தொடர்ந்து முதலையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆற்றில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வலைகள் கட்டப்பட்டன. ஒரு சில இடங்களில் கூண்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன. 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள வலைகள் நாளுக்கு நாள் சுருக்கப்பட்டு வந்தன. 2 கிலோ மீட்டரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரமாக இடைவெளி விட்டு, அப்பகுதியில் வலைகளை சுருக்கி வந்தனர். நேற்று கடையாலுமூடு அருகே ஒரு நிலக்கல் பகுதியில் குறைந்த இடைவெளியில் கோதை ஆற்றில் இருபுறமும் வலைகள் இருந்தன.

இந்நிலையில், இன்று காலை ஒருநிலக்கல் பாலத்திற்குக் கீழே கட்டப்பட்டிருந்த வலையில் முதலை சிக்கியது.

ராட்சத முதலை

300 கிலோ எடை கொண்ட அந்த ராட்சத முதலை வலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்று பயங்கர சத்தம் எழுப்பியது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கேட்டு அங்கு சென்று வலையில் சிக்கிய முதலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனஅதிகாரி அன்பு தலைமையிலான குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி முதலையை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர் மீட்கப்பட்ட முதலையை வனத்துறைக்கு சொந்தமான மீட்பு வாகனத்தில் உள்ள கூண்டு மூலம் ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

SCROLL FOR NEXT