தமிழக செய்திகள்

கோவையில் பரபரப்பு சம்பவம்: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய 4 ஊழியர்கள் கைது

ஒரு உண்டியலை திறக்காமலேயே ஊழியர்கள் சிலர் அதில் இருந்த பணத்தை திருடி விட்டதாக பக்தர் ஒருவர் சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு ஊழியர்கள் கைதான சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் உள்ளது. கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கிறார்கள்.

ஆடி மாத வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மனை வழிபட கோவிலில் கூட்டம் அலைமோதி வருகிறது.

உண்டியல் பணம் திருட்டு

இத்தகைய புகழ்பெற்ற இந்த கோவிலில் உண்டியல் திருட்டு சம்பவம் நிகழ்ந்ததும், கோவில் ஊழியர்களே இத்தகை இழிவான செயலில் ஈடுபட்டதும் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியில் உள்ளது.

கோனியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மொத்தம் 9 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக ஒரு உண்டியல் உள்ளது. சமீபத்தில் நடந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு 6 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

மொத்தம் இருந்த 16 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கடந்த 15-ந் தேதி கோவில் வளாகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. கோவில் ஊழியர்கள் மட்டுமல்லாமல் பக்தர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உண்டியல் பணத்தை எண்ணினர். அப்போது ஒரு உண்டியலை திறக்காமலேயே ஊழியர்கள் சிலர் அதில் இருந்த பணத்தை திருடி விட்டதாக பக்தர் ஒருவர் சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

அதிகாரி விசாரணை

அதன்பேரில் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நேற்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ்குமார் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் ஆய்வு செய்து விசாரிக்கப்பட்டது.

விசாரணையில் உண்டியல் பணம் திருடப்பட்டது உண்மை என தெரியவந்தது. இந்த விவகாரத்தில் கோவில் சீட்டு விற்பனையாளராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், பிரதீப்குமார், பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டு சேர்ந்து செயல்பட்டது தெரியவந்தது.

உண்டியல் எண்ணும் பணியின்போது ஒரு உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்காமல் ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களோடு அதனை சேர்த்து மறைத்து வைத்திருக்கின்றனர். இதை அதிகாரிகள் கவனிக்கவில்லை. பின்னர் அந்த உண்டியலை டிராலியில் எடுத்துச் சென்று கலையரங்கத்துக்கு பின்னால் வைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து பையில் போட்டு எடுத்துச் சென்று இருக்கிறார்கள்.

4 ஊழியர்கள் கைது

மொத்தம் அதில் ரூ.31 ஆயிரம் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை ஊழியர் பாலசுப்பிரமணியன் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் 4 பேரும் சேர்ந்து பங்கு வைத்துக் கொண்டுள்ளனர். விசாரணையில் 4 பேரும் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் குமார் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் ஊழியர்கள் பாலசுப்பிரமணியன், சரவணன், பிரதீப்குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இவர்களில் பாலசுப்பிரமணியம் கேரளாவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கோவை பீளமேடு பகுதியில் தங்கியிருந்து வேலைக்கு வந்து சென்றுள்ளார். சரவணன் பேரூரைச் சேர்ந்தவர், பிரதீப் குமார் ரத்தினபுரியில் வசித்து வருகிறார். கிருஷ்ணராஜ் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் 4 பேரையும் இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு ஊழியர்கள் கைதான சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.