தமிழக செய்திகள்

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எம்எல்ஏ வி.எஸ்.பாபுக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான வி.எஸ்.பாபுவுக்கு கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு தேவையான அவசர மருத்துவ மேலாண்மை மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சைகள் உடனுக்குடன் தொடங்கப்பட்டன.

சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை

தற்போது பல்துறை நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை தற்போது தொடர்ந்து சீராக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட மூத்த தலைவரான வி.எஸ்.பாபு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அவரது உடல்நிலை சீரடைந்து வருவது குறித்த தகவல் அறிந்ததும், அவரது ஆதரவாளர்களும், த.வெ.க. தொண்டர்களும், தொகுதி மக்களும் அவர் விரைவில் முழு உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT