கொடுமுடியாறு அணை  
தமிழக செய்திகள்

திருக்குறுங்குடி பகுதியில் சாரல் மழை- கொடுமுடியாறு அணை நீர்மட்டம் உயர்வு

அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.

அதன் பிறகு நவம்பர் மாதம் 10-ந் தேதி அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து 4 அடி ஆனது.

கொடுமுடியாறு அணை

இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருக்குறுங்குடி பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலையிலும் தென் மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இதையடுத்து, கொடுமுடியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது, கடந்த 5-ந் தேதி முதல் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது.

நீர்மட்டம் உயர்வு

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 38.50 அடி ஆனது. ஒரே வாரத்தில் அணையின் நீர்மட்டம் 34.50 அடி உயர்ந்துள்ளது. இதனிடையே நேற்று மதியம் கனமழை கொட்டியது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து, இன்று காலை 43.50 அடியை எட்டியது.

தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 187 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. வினாடிக்கு 2 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 52.50 அடி ஆகும். அணை நிரம்ப இன்னும் 9 அடிக்கு தண்ணிர் நிரம்ப வேண்டும். மழை நீடித்தால் விரைவில் முழு கொள்ளளவை எட்டி அணை நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அணையின் மூலம் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாவில் உள்ள 44 பாசன குளங்களும், 5 ஆயிரத்து 780. 91 ஏக்கர் விளை நிலங்களும் பயனடைந்து வருகின்றன. அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.