தமிழக செய்திகள்

TN Assembly Election| கோடம்பாக்கத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் வாகனத்தில் ரூ.2 லட்சம் பறிமுதல்

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதி 6-வது தெருவில் நிறுத்தப்பட்டு இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த 112-வது வட்ட செயலாளர் விஜய் என்பவரின் மொபட் வண்டியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சம் ரொக்கமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.