தமிழக செய்திகள்

KN Nehru | ரூ.1,020 கோடி ஊழல் புகார்... கே.என். நேரு விவகாரத்தில் சிக்கப்போகும் அதிகாரிகள்

வசூல் வேட்டையில் முக்கிய பங்காற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் அதிக அதிகாரம் கொண்ட துறையாக நகராட்சி நிர்வாகத்துறை பார்க்கப்படுகிறது. எனினும், இத்துறை, அமைச்சர் கே.என். நேருவை சுற்றி எழுந்துள்ள 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரால் நிலைகுலைந்துள்ளது. அமலாக்கத்துறை சார்பில் தமிழக டி.ஜி.பி. மற்றும் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள 252 பக்க ரகசிய ஆவணங்கள், ஆளும் கட்சியின் தூக்கத்தை கலைத்துள்ளன.

ஒரு தனியார் நிறுவனத்தில் நடந்த வங்கி மோசடி சோதனையில்தான் இந்த விவகாரத்தின் தொடக்கம் ஆரம்பித்தது. அங்கு கிடைத்த ஆவணங்கள், நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த வேலைவாய்ப்பை விற்பனையாக்கியதை அம்பலமாக்கி விட்டன. 2,538 காலி பணியிடங்களை நிரப்புவதில், தகுதியை விட பணம் பிரதானமாக இருந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, 150 பேரிடம் மட்டும் தலா 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை திரட்டியுள்ளது. அதிகாரமிக்க அரசியல்வாதிகளும், அவர்களுக்கு நெருக்கமான நிழல் நிறுவனங்களும், அதிகாரிகளும் இந்த வசூல் வேட்டையில் முக்கிய பங்காற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு முறைகேடு ஒருபுறம் இருக்க, மறுபுறம் டெண்டர்களில் அமைச்சரின் உறவினர்கள் மூலமாக வசூலிக்கப்பட்ட 7.5% முதல் 10% வரையிலான கமிஷன் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெண்டர்கள் விடப்படுவதற்கு முன்பே, யாருக்கு அந்த ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் நேருவின் விருப்பப்படி விதிகள் வளைக்கப்பட்டு, குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஊழல் பணம் வெறும் தனிநபர் கைக்கு மட்டும் செல்லாமல், கட்சி நிதி என்ற பெயரில் முறைகேடாக திரட்டப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ஹவாலா பரிவர்த்தனைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் உரையாடல்கள், வங்கி பரிவர்த்தனைகள் என டிஜிட்டல் ஆதாரங்கள் ஏராளமாக குவிந்துள்ளன.

அமைச்சர் நேருவின் மீது புகார் பாய்ந்துள்ள நிலையில், ஊழலுக்கு துணை நின்றதாக கூறப்படும் உயர்மட்ட அதிகாரிகளின் பெயர்களும் அடிபடுகின்றன. குறிப்பாக, நகராட்சி நிர்வாக துறை முதன்மை செயலாளர் உள்பட இரு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியகி உள்ளன.

அமலாக்கத்துறை தனது கடிதத்தில் மிக கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. "இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், காவல் துறையும், நகராட்சித்துறை அதிகாரிகளும் இந்த ஊழலுக்கு உடந்தையாக இருப்பதாக கருதப்படும்" என்று தெரிவித்துள்ளது.

அதாவது, மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அமலாக்கத்துறை நேரடியாக களத்தில் இறங்கி அடுத்தடுத்த அதிரடி கைதுகளை நடத்தும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தி.மு.க. அரசுக்கு, தேர்தல் நேரத்தில் கே.என். நேரு மீதான இந்த புகார் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், 1,020 கோடி ரூபாய் ஊழல் புகார் என்பது அரசியல் குற்றச்சாட்டாக மட்டும் இல்லாமல், சட்டரீதியான நெருக்கடியாகவும் உருவெடுத்துள்ளது. அது கே.என். நேருவுக்கு மட்டுமல்ல, உயர்அதிகாரிகளுக்கும் வைக்கப்பட்ட பொறியாகவே பார்க்கப்படுகிறது.