தமிழக செய்திகள்

தனியாக வசித்த தம்பதி கொலையில் 3 மாதங்களுக்கு பிறகு கொலையாளிகள் கைது

கொலையாளிகள் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நோக்கி சென்றது தெரிய வந்தது.

தொடர் திருட்டு, கொலையில் ஈடுபட்ட தினேஷ் குமார், சூர்யா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள குண்டுக்கல் ஊராட்சி ராமப்பகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 85). இவரது மனைவி அமராவதி (70). இவர்கள் ஜோடுகுளியில் இருந்து சின்னதிருப்பதி செல்லும் பகுதியில் சாலையை ஒட்டிய ஒலக்கூர் புளியமரத்து பஸ் நிறுத்தம் அருகே தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தென்னை மட்டைகளை பின்னும் தொழில் செய்து வந்தனர்.

கொலை

இந்த நிலையில் இவர்களது பேரன் நவநீதன் என்பவர் தினமும் இவர்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். அதன்படி கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி இரவு 8 மணிக்கு பேரன் நவநீதன் தனது தாத்தா -பாட்டிக்கு சாப்பாடு கொண்டு வந்தபோது அங்கு தாத்தா ஜெயராமன், பாட்டி அமராவதி ஆகிய இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு

இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஏவிவிடப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து ஜோடுகுளி வழியாக சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையில் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் சென்று நின்று கொண்டது.

கொலையாளிகள்

ஆகவே கொலையாளிகள் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நோக்கி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த வழியாக உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும் 5-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஆனால் கொலையாளிகள் சிக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக போலீசாருக்கு அவர்கள் தண்ணி காட்டி வந்தனர்.

தொடர் திருட்டு

இதனிடையே ஓமலூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த சுமன் தனது குடும்பத்தினருடன் கடந்த ஜூலை மாதம் வேளாங்கண்ணி சென்ற நிலையில் கொள்ளையர்கள் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் செயின் திருடி சென்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து

இதே போல் ஜோடுகுளி புதூரில் ஒரு ஓட்டு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 1½ பவுன் செயின் மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்டவற்றையும் திருடி சென்றனர். மேலும் தொப்பூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ், அவரது மனைவி செண்பகவல்லி, அவரது மகன் நந்தகுமார் ஆகியோர் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகை, ரூ.14,000 ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

10 தனிப்படைகள்

ஒரு பக்கம் கொலை, மற்றொரு பக்கம் தொடர் கொள்ளை போன்றவற்றால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் திருடப்பட்ட நகைகள் காடையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்தது தெரிய வர போலீசார் உடனடியாக அங்கு சென்று நகை விற்றவர் குறித்து முழு தகவல்களையும் திரட்டினர்.

விசாரணை

போலீசாரின் தொடர் விசாரணையில் கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது காடையாம்பட்டி சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகன் தினேஷ்குமார் (32), சந்தப்பேட்டை காட்டுவளவு பகுதியை சேர்ந்த சுப்பு என்பவருடைய மகன் சூர்யா (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

கிராம நிர்வாக அலுவலர் முன்பு சரண்

இதையடுத்து அவர்களை தேடி போலீசார் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் இருவரும் காடையாம்பட்டி தெற்கு கிராம நிர்வாக அலுவலர் சுதாகரிடம் சரண் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் தீவட்டிப்பட்டி போலீசில் சரண் அடைந்த தினேஷ்குமார் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் ஒப்படைத்தார்.

திடுக்கிடும் தகவல்

அவர்களிடம் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

தினேஷ் குமார் நாச்சினம்பட்டி பகுதியில் உள்ள கலையரசன் என்பவருடைய அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். அப்போது தினேஷ் குமாரும், காடையாம்பட்டி சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரும் நண்பர்கள் ஆகினர். தினேஷ்குமார் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார். இதற்காக ெதாடர்ந்து அடிதடி, வழிப்பறி என பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டார். இந்த நிலையில் சூர்யாவுக்கு திருமண பேச்சுவார்த்தை நடந்த நிலையில் பணம் தேவைப்படுவதாக சூர்யா தனது நண்பர் தினேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

கைவரிசை

இதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து திருடலாம் எனக் கூறி திருட்டு சம்பவங்களில் ஈடுபட தொடங்கினர். இதில் வயதான தம்பதி ஜெயராமன்- அமராவதி ஆகியோரை அடித்துக் கொலை செய்து தங்கதோடு திருடினார்கள். அடுத்ததாக தங்களது நண்பர் சுமன் என்பவர் வீட்டிலும், ஜோடுகுளி புதூரில் உள்ள வீட்டிலும் கைவரிசை காட்டினார்கள். மேலும் தினேஷ்குமார் தொப்பூரில் உள்ள தனது சொந்த அத்தையான செண்பகவல்லி, அவரது கணவர் முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ் ஆகியோர் வீட்டையும் விட்டு வைக்கவில்லை. அங்கேயும் கைவரிசை காட்டினர்.

சரண்

இந்த திருட்டு வழக்கே கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவியது. வழக்கின் முக்கிய திருப்பமாக நகைக் கடையில் நடத்திய விசாரணை எங்களுக்கு வழக்கின் பெரிய திருப்பு முனையாக இருந்தது. அங்கு திரட்டப்பட்ட ஆவணங்கள், தடயங்கள், சி.சி.டி.வி. காட்சிகள் போன்றவற்றை வைத்து அவர்களை கண்டுபிடித்தோம். அதற்குள் வி.ஏ.ஓ.விடம் சரண் அடைந்து விட்டனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

ஜெயிலில் அடைப்பு

தொடர் திருட்டு, கொலையில் ஈடுபட்ட தினேஷ் குமார், சூர்யா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் திருடிய சுமார் 14 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT