தமிழக செய்திகள்

பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகும் முக்கிய நிர்வாகிகள் - அண்ணாமலைக்கு ஆதரவு!

பாஜகவின் மாநில துணைத்தலைவர் மற்றும் மாநிலச் செயலாளர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

பாஜவில் இருந்து விலகியுள்ள அண்ணாமலை ‘வீ தி லீடர்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ள நிலையில், விரைவில் இதனை அரசியல் கட்சியாகவும் பதிவு செய்யவுள்ளார்.

காலையில்தான் அறிவிப்பு வெளியானநிலையில் தற்போதுவரை இந்த இயக்கத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.

அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் சேர உள்ளதாகவும், அவருக்கு ஆதரவளிப்பதாகவும், ஆற்றல் மிக்க துணிச்சலான தலைவர் அண்ணாமலை என்றும், யார் தவறு செய்தாலும் அவர் சுட்டிக்காட்டுவார் எனவும் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜகவின் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசனும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.