கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்வது என்று முடிவெடுத்தனர். பின்னர் அவர்கள் ஒரு காரில் புறப்பட்டு வந்தனர்.
ஊட்டி– கோத்தகிரி மலைபாதையில் நள்ளிரவு நேரத்தில் அந்த கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது மடித்துறை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலைதடுமாறி சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதனால் அந்த வண்டியில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். ஆனாலும் நள்ளிரவு என்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை. பின்னர் அவர்கள் கவிழ்ந்து கிடந்த வண்டிக்குள் இருந்து காயமின்றி பத்திரமாக வெளியேறினர். இந்த விபத்தில் சுற்றுலா வாகனம் பலத்த சேதம் அடைந்தது.
நீலகிரி மாவட்டம் மலைப்பகுதியாக இருப்பதால், இங்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் வளைவுகள், குறுகிய பாதைகள் மற்றும் திடீர் இறக்கங்கள் ஆகியவை குறித்து முழுமையாக தெரிவது இல்லை.
இதுதான் மலைப்பாதையில் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் பார்வைத்திறன் குறைவதும், அதிவேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுவதும் விபத்து அபாயத்தை அதிகரிப்பதாக உள்ளன.
நீலகிரி மலைப்பாதையில் சாலை விபத்துகள் தொடர்வது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சமவெளி பகுதியில் இருந்து மலைப்பாதைக்கு வரும் வாகனஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை மெதுவாகவும் கட்டுப்பாட்டுடனும் இயக்க வேண்டும்.
வளைவுகளில் ஹாரன் ஒலித்தபிறகே பயணத்தை தொடர வேண்டும். இரவு நேரங்களில் தேவையற்ற வேகத்தை தவிர்ப்பது அவசியம்.
மேலும் புதியதாக வரும் சுற்றுலா பயணிகள் உள்ளூர் சாலை நிலைமை குறித்து முன்கூட்டியே அறிந்து கொண்டு பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.