தமிழக செய்திகள்

கேரளாவில் கனமழை-பம்பையில் நிலச்சரிவு அபாயம்: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

கேரளாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பம்பை ஆற்றில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பா நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பம்பை ஆற்றில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியமும் பத்தனம் திட்டா மாவட்ட நிர்வாகமும் மற்றும் தமிழக அரசும் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளன.

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

நிலச்சரிவு எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள சிறப்பு 'நிறபுத்தரி' பூஜையைக் காண பக்தர்கள் திட்டமிட்டிருந்தனர்.  இந்நிலையில், பம்பை, சந்நிதானம் செல்லும் மலைப்பாதைகள் மற்றும் வனப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு & தேவஸ்வம் வாரிய அறிவுறுத்தல்:

பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி பயணத்தைத் தற்காலிகமாகத் தவிர்க்கவோ அல்லது ஒத்திவைக்கவோ வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "கனமழை காரணமாக பம்பை மற்றும் சந்நிதானத்திற்கு செல்லும் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், தற்போதைய சூழலில் சபரிமலைப் பயணத்தை மேற்கொள்வது ஆபத்தானது."  

பயணத்தை ஒத்திவைத்தல்:

'நிறபுத்தரி' வழிபாட்டுக்காக வரும் ஐயப்ப பக்தர்கள் வானிலை சீரடையும் வரை தங்களது பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆற்றுக்குச் செல்லத் தடை:

பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், ஆற்றில் இறங்குவதோ அல்லது குளிப்பதோ முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.  பக்தர்கள் உள்ளூர் நிர்வாகம், தேவஸ்வம் வாரியம் மற்றும் காவல் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.