Cauvery political row: Nirmalkumar blames DMK-Karnataka ties for confusion 
தமிழக செய்திகள்

டி.கே. சிவக்குமார் உடன் சேர்ந்து கொண்டு திமுக முட்டுக்கட்டை: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

கடந்த முப்பது ஆண்டுகளாக காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுக தான்.

கர்நாடக முதல்வருடன் திமுக நெருங்கிய உறவு

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

காவிரி நதிநீர் தொடர்பாக நேற்று காலை முதல்வர் பல தரப்பு ஆலோசனையை முடித்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, வழக்கறிஞர் உமாபதியிடம் வழக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து காவிரி குறித்தான வழக்கை திமுக அவசரமாக ஐந்து மணிக்குமேல் பதிவு செய்கிறார்கள்.

இந்த மாதிரி ஒரே மாநிலத்தில் காவிரி நதி நீர் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டால், அது பல்வேறு விதமான குழப்பத்தை ஏற்படுத்தி, மாநிலத்திற்கான உரிமைகளை பின்னோக்கித் தள்ளும்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் காவிரி பிரச்சனை குறித்து கடந்த ஐந்து வருடங்களாக எந்தவொரு வழக்கும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த முப்பது ஆண்டுகளாக காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுக-வும் அதன் தலைவர் கருணாநிதியும்தான். மறுபடியும் அதே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

மற்றொரு புறம் காவிரி பிரச்சனை தொடர்பாக சரியான முடிவை எடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும், அதிமுக செயல்பட்டு வருகிறது.

இந்த மாதிரியான சூழலில் தமிழக மக்களின் உரிமைகளை காக்க, நாளை உச்சநீதிமன்றத்தில் முதல்வரின் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.

திமுக-விற்கும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவு, இந்த மாதிரியான பல குழப்பங்கள் மூலமாக தெளிவாக தெரிகிறது.

இந்த மாதிரியான செயல்களை திமுக குறைத்து கொள்ள வேண்டும். முதலில் மக்கள் உங்களுக்கு அளித்த தீர்ப்பை குறித்து உணருங்கள்.

தமிழகத்திற்கு எதிரான இந்த செயல்பாடுகளை, நீங்கள் தொடர்ந்து செய்யாதீர்கள். இந்த பிரச்சனைக்கு தமிழக முதல்வர் சுமூகமான வழியில் தீர்வை காண அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் அனைத்து வகையிலும், கர்நாடக முதல்வருடன் திமுக சேர்ந்து கொண்டு, ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே வருகிறது.

முதலமைச்சர் விஜய் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார்.

தமிழகத்திற்கு 17 டி.எம்.சி காவிரி நீர் வர வேண்டி இருக்கிறது, வினாடிக்கு 3,500 கன அடி என்பது மட்டும் போதாது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்க கூடாது என முன்னாள் முதல்வர் கருணாநிதி அழுத்தம் கொடுத்தார்.

ஜெயலலிதாவுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக கருணாநிதி செய்தது போல், தற்போது செய்கிறார்கள்.

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் விஷயத்தில், பெரும்பாலான பணங்கள் பெங்களூரில் இருந்துதான் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைமை எவ்வாறு பெங்களூரில் இருந்து, பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது. பெங்களூர் உடன் திமுக தலைமை அவ்வளவு நெருக்கமாக உள்ளது.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் காங்கிரஸ் தலைமை சொல்வதை கேட்பதே இல்லை, மாறாக திமுக சொல்வதைத்தான் கேட்கிறார்.

இவ்வாறு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறினார்.