புயல் எச்சரிக்கை மற்றும் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து காசிமேடு மீனவர்கள் 10 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
காசிமேடு துறைமுகத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகிறார்கள். சமீபத்தில் வங்ககடலில் உருவான அக்வான் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த 13-ந்தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் கடந்த 4 நாட்களாக காசிமேடு மீனவர்கள் ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 8 விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும், முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வார இறுதி நாளான நேற்று காசிமேடு சந்தையில் மீன்விற்பனை செய்யாமலும் போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் காசிமேட்டில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலத்தில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மரியவில்சன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனை ஏற்று கடந்த 4 நாட்களாக நடைபெற்ற மீனவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் புயல் எச்சரிக்கை மற்றும் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து காசிமேடு மீனவர்கள் 10 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
இன்று அதிகாலை முதல் விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல தொடங்கின. இதனால் காசிமேடு பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. எனவே வரும் நாட்களில் காசிமேட்டில் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.