தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்தார். அவர் எங்கு சென்றாலும் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் காவல்துறை கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. சில இடங்களில் அவருடைய பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூர் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அவரை பார்ப்பதற்காக நண்பகலில் இருந்து மாலை வரை மக்கள் காத்திருந்தனர்.
விஜய் பேசுவதற்கான இடத்திற்கு வந்தபோது, அங்கு கூட்டம் அலைமோதியது. அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தவெக-வினருக்கு ஒரு ஆராத காயமாக உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு நினைவு இடம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில் "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே கரூரில் உயிரிழந்தவர்களுக்கு த.வெ.க. சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சரும், சமீபத்தில் த.வெ.க. ஆட்சியில் இணைந்தவருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அவர் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பெரும்பாலானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.