கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், 20 கிலோ விலங்கு இறைச்சி நிரம்பிய பைகளும் கைப்பற்றப்பட்டதாக காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் பரவிய உடனேயே, உயிரிழந்தவரின் உறவினர்களும் கிராம மக்களும் ஆத்திரம் அடைந்து ஷக்யா கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தையும் பணியாளர் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டு அவற்றை சூறையாடினர்.
பெயர் பலகையைக் கிழித்தெறிந்தும், அலுவலக தளவாடங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வெளியே வீசியும் அவர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். மேலும், கல்லிடோடியில் உள்ள வேட்டைத் தடுப்பு முகாமுக்குள் புகுந்து, அங்கிருந்த சொத்துகளையும் சேதப்படுத்தினர்.
மேலும் அவர்கள் ஆனூர் நகரில் சாலையை மறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளும் போராட்டத்தில் இணைந்ததால், துறை அலுவலகத்தின் முன்பு ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டனர்.
அப்போது கணவரை பறிகொடுத்த பீட்டரின் மனைவி கூறுகையில், எனது கணவர் பீட்டர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மக்காச்சோளப் பயிரைப் பராமரிக்க வயலுக்கு சென்றிருந்தார். தன் கணவர், தனிப்பட்ட விரோதம் காரணமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஒரு பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அதுபோல் குமாரின் மனைவி கூறுகையில் "என் கணவர் தவறு செய்திருந்தால் அவரை கைது செய்து இருக்கலாம். ஆனால் வனத்துறையினர் அவ்வாறு செய்யவில்லை. வேண்டும் என்றே திட்டம் போட்டு கொன்று இருக்கிறார்கள். 2 மகள்கள் இருக்கிறார்கள், அவர்களின் எதிர்காலத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என கண்ணீருடன் கூறினார்.
அவர்களிடம் போலீஸ் துணை ஆணையர் ஸ்ரீரூபா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.முத்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அவ்விடத்தில் பதற்றமான சூழல் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாது காப்புக்காக ரிசர்வ் காவல் படை நிறுத்தப்பட்டுள்ளது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயரத்தை தாங்க முடியாமல் உறவினர்கள் அழுதுகொண்டிருந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதாக கூறி நடத்தப்பட்ட மோதலில் 3 மூன்று பேர் கொல்லப்பட்டது மனிதாபிமானமற்ற செயலாகும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 கோடி இழப்பீடும், அரசு வேலைகளும் வழங்கப்பட வேண்டும் என விவசாய தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மாநில பட்டு வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை மந்திரி புட்டரங்கஷெட்டி கூறுகையில், வனத்துறையின் பொறுப்பற்றத்தனம் கண்கூடாகத் தெரிகிறது. இந்த வழக்கின் உண்மை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கால் அரசும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்துவோம் என்று கூறினார்.
வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தது குறித்து நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், காலை 5 மணிக்கு இந்த சம்பவம் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது.
அதிகாரிகள் சில விவரங்களை அளித்துள்ளனர். சம்பவ இடத்தில் சில பொருட்களும் ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு, அவை பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு உண்மை தெரியவரும்," என்றார்.
இந்த நிலையில் வனத்துறையினர் 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கர்நாடக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வனத்துறை அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்த அந்தோணி சாமியின் மனைவி லௌர்டு மேரி அளித்த புகாரின் அடிப்படையில் ஆனூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் அதிகாரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக, “ஆனூர் பிரிவு வனத்துறை அதிகாரிகள்” குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு பதிவு தென் மண்டல ஐ.ஜி. போரலிங்கேகௌடா மற்றும் எஸ்.பி. முத்துராஜு ஆகியோர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் பலி யானவர்களின் உடல்களை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாகவும் போராட்டம் நடந்து வருகிறது.