தமிழ்நாட்டிற்கு 4,000 கன அடி வீதம் இன்றுமுதல் (செப்.25) 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை ஏற்க முடியாது என கர்நாடக அரசு கூறிவருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்குநீரை உடனடியாக கர்நாடக திறக்கவேண்டும் என காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,
“காவிரியில் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நீரில் சுமார் 20 டி.எம்.சி அளவிற்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ஏற்கனவே குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது நடைபெற்று வரும் சம்பா சாகுபடியும் பாசன நீரின்றி பெரும் கேள்விக்குறியாகும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.
செப்டம்பர் 25 முதல் 15 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்து, அதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் ஏற்று அதிகாரப்பூர்வ உத்தரவிட்டுள்ளது.
இந்த 4,000 கனஅடி உத்தரவே கூட முந்தைய 6,000 கனஅடி உத்தரவை விட 2,000 கனஅடி குறைவானதுதான்.
இருப்பினும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் விகிதாச்சார விதிகளின்படியும், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படியும் கிடைக்க வேண்டிய நீரையும் திறக்காமல், உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்வோம் எனக் கர்நாடக முதலமைச்சர் கூறி காலந்தாழ்த்துவது ஏற்கவே முடியாத அநீதியாகும்.
எனவே, சட்ட விதிகளையும் ஆணையத்தின் உத்தரவையும் மதித்து, 15 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு 4,000 கனஅடி நீர் திறப்பதோடு, நிலுவையில் உள்ள பற்றாக்குறையையும் உடனடியாக ஈடுசெய்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கை கர்நாடக அரசு உடனடியாகத் திறந்துவிட வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.