தமிழக செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்- பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு

ஐந்தருவி, மெயின் அருவி மற்றும் சினி அருவி பகுதிகள் தண்ணீரின்றி வெறும் பாறைகளாக காட்சியளித்து வருகின்றன.

தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரமடையாததாலும், கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்ப்ட்டதாலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக குறைந்துள்ளது. இதன் காரணமாக புகழ்பெற்ற ஐந்தருவி, மெயின் அருவி மற்றும் சினி அருவி பகுதிகள் தண்ணீரின்றி வெறும் பாறைகளாக காட்சியளித்து வருகின்றன.

நீர்வரத்து சரிவு

கர்நாடக மாநிலத்தின் குடகு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடைகிறது. வழக்கமாக ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கியவுடன் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதம் மற்றும் குறைவான மழைப்பொழிவு காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய நீர்வரத்து இல்லை.

இதன் விளைவாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 1,200 கன அடியாக இருந்த நீர்வரத்து முதலில் 700 கனஅடியாக குறைந்தது.

தற்போது மேலும் சரிந்து 400 கன அடியாக குறைந்தது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் 24 மணி நேரமும் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

கபினி அணை

கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்களான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளதால், தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளதாக நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஏமாற்றம்

எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் ஒகேனக்கல் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், பரிசல் சவாரிக்கும் போதிய நீரோட்டம் இல்லாததால் சுற்றுலா நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன.

பரிசல்

இதனால் பரிசல் ஓட்டிகள், எண்ணெய் மசாஜ் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் சுற்றுலாவை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும் அருவிகளில் தண்ணீர் இல்லாததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

எதிர்பார்ப்பு

தென்மேற்கு பருவமழை கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிரமடைந்து, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்த பின்னரே ஒகேனக்கல் மீண்டும் தனது இயற்கை அழகையும் பழைய பொலிவையும் பெறும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளூர் மக்கள் காத்திருக்கின்றனர். தற்போது ஒகேனக்கலின் புகழ்பெற்ற ஐந்தருவி பகுதி முழுவதும் பாறைகள் மட்டுமே தெரியும் அளவுக்கு வறண்ட நிலையில் காணப்படுவது பொது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.