கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தை அடுத்த பெரிய விளையை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் ஆன்றனிராஜ் (வயது 25). இவர் சொந்தமாக ஹிட்டாச்சி பொக்லைன் வைத்து தொழில் செய்து வந்தார்.
அதே ஊரை சேர்ந்தவர் ஞானசெல்வம் என்ற அழகேசன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், தற்போது கொட்டாரத்தில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது மகள் ஏஞ்சல், கல்லூரி படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரை, ஆன்றனிராஜ் ஒருதலையாக காதலித் தாராம். இதனை அவர், ஏஞ்சலிடம் கூறியபோது அவர் ஏற்க மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ஆன்றனிராஜ் மீது கன்னியாகுமரி போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார், அவரை வரவழைத்து எச்சரித்துள்ளனர். ஆனாலும் ஆன்றனிராஜ், தொடர்ந்து ஏஞ்சலுக்கு தொல்லை கொடுத்து வந்தாராம். இதனால் மனவேதனை அடைந்த ஏஞ்சல் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இதனை கண்டு அவரது பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஏஞ்சல் உடலை பார்த்து கதறி அழுத நேரத்தில், அங்கு ஆன்றனிராஜ் வந்துள்ளார். அவரை பார்த்ததும் ஏஞ்சலின் உறவினர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் அந்த பகுதியில் கிடந்த கல் மற்றும் கட்டையை எடுத்து ஆன்றனிராஜை தாக்கினர்.
இந்த கொலைவெறி தாக்குதலில் ஆன்றனிராஜ் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயங்களுடன் கிடந்த ஆன்றனிராஜை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகர், கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து ஏஞ்சல் மற்றும் ஆன்றனிராஜ் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இளம்பெண் தற்கொலை மற்றும் வாலிபர் கொலை சம்பவங்கள் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து வாலிபரை அடித்துக் கொன்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் சூப்ப ரண்டு அன்சுல்நாகர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தீவிர விசாரணையில் இறங்கிய தனிப்படையினர் இளம் பெண்ணின் உறவினர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ரவிசெல்வம், வினீஸ், டெபின் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.