செஞ்சியில் மாயமான சிறுமியின் பெற்றோருக்கு கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல் கூறியபோது எடுத்தபடம். 
தமிழக செய்திகள்

த.வெ.க. ஆட்சியில் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது- கனிமொழி எம்.பி. பரபரப்பு பேட்டி

பெற்றோருக்கு குழந்தை கிடைக்குமா, எங்கு இருக்கு என்று நம்பிக்கை தரக்கூடிய வகையில் ஒரு சின்ன தகவல் கூட தரப்படவில்லை.

த.வெ.க. ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார். 34 நாட்களாக மாயமான செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்-பவானி தம்பதியினர். இவர்களது 2-வது மகள் ஹேமலதா.

சிறுமி

கடந்த மாதம் 11-ந்தேதி தனது பிறந்தநாளை பெற்றோர், உறவினர்களுடன் கொண்டாடி விட்டு, பெற்றோருடன் தூங்கிய சிறுமி மறுநாள் 12-ந்தேதி அதிகாலை மாயமானார். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர். சிறுமி மாயமாகி 34 நாட்கள் ஆகி விட்ட நிலையில், எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி இன்று ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு நேரடியாக வருகை தந்தார்.

பெற்றோருக்கு ஆறுதல்

அங்கு அவர் சிறுமியின் பெற்றோர் வடிவேலு-பவானி தம்பதியிடம் நடந்த சம்பவம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். அப்போது சிறுமியின் தாய் கனிமொழி எம்.பி.யின் கையை பிடித்து கதறி அழுதார். அவருக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறி, சிறுமியை விரைவில் கண்டுபிடித்துத் தருவதாக உறுதியளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

7 வயது சிறுமி மாயமாகி கிட்டத்தட்ட 34 நாட்கள் ஆகிறது. ஆனால், அந்தக் குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கு உண்மையாகவே இந்த அரசு உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

பாதுகாப்பு இல்லை

குழந்தைகள் நலன் மற்றும் காவல்துறை இரண்டுமே முதலமைச்சர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. குழந்தைகளுக்கு பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை.

இதே குழந்தைகளை பார்த்து தான், நண்பா, நண்பீஸ் என கூறி நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் அந்த குழந்தைகளுக்கு எந்த பாதுகாப்பும் இந்த ஆட்சியில் இல்லை.

நேற்று முதலமைச்சர் விஜய் குழந்தைகளுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடி கேக் ஊட்டி விடுகிறார். அதில் வேறு கருத்தில்லை. ஆனால் குழந்தைகளுக்கு கேக் ஊட்டும் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை செஞ்சி சிறுமியின் வீட்டிற்கு வந்து ஏன் ஆறுதல் தெரிவிக்கவில்லை. இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் கூட இங்கு சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை.

குற்றங்கள் அதிகரிப்பு

எனவே இந்தக் குடும்பத்துக்கு ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லி, சிறுமியை நிச்சயமாகக் கண்டுபிடித்துக் கொடுப்போம் என்று உறுதி அளிக்க வேண்டும்.

த.வெ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து குழந்தைகள், பெண்கள் மாயமாகி உள்ளனர். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. இதற்கெல்லாம் இந்த அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் த.வெ.க ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த சிறுமி மாயமான வழக்கில் இந்த அரசு எந்தவித சரியான நடவடிக்கையும் இல்லை. பெற்றோருக்கு இந்தக் குழந்தை கிடைக்குமா, எங்கு இருக்கு என்று நம்பிக்கை தரக்கூடிய வகையில் ஒரு சின்ன தகவல் கூட தரப்படவில்லை.

த.வெ.க. ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய ஆறுதலும் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

ஏற்கனவே இந்த வழக்கில் தேடுதலைத் தீவிரப்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT