திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எதிரணியில் கூட்டணி உருவாக்கி இருக்கும் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி தனது நிலையை மாற்றி மாற்றி பேசக்கூடியவர். பா.ஜ.க.வுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டேன் என்று தெரிவித்தார். தற்போது அந்த அணியுடன் சுயலாபத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார்.
சி.ஏ.ஏ. சட்டம் மக்களவையில் அமல்படுத்தியபோது அதனை ஆதரித்து பேசினார். கிராமப்புற மக்களுக்கு வேலை உத்தரவாதம் அளித்து வந்த 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு நீக்க முயற்சி எடுத்து வருகிறது.
டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் இருக்கும் கிராமத்தில் எந்த ஊரில் எத்தனை பேருக்கு வேலை கொடுக்கலாம் என அவர்கள் முடிவு செய்ய உள்ளனர். இந்த திட்டத்தில் மாநில அரசுக்கு கொடுத்த நிதி குறைக்கப்பட்டு விட்டது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசமாட்டார்.
தற்போது தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்தில் மோடியும், அமித்ஷாவும் சுற்றுலா பயணியை போல வந்து செல்கின்றனர். பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த யாருக்கும் எதிர்காலம் இல்லை. அந்த அக்கறையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு வருகிற தேர்தலில் எதிர்கட்சி வரிசையாவது கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. தமிழகத்திற்கு துரோகம் செய்த அனைவரும் ஒரே கூட்டணியில் உள்ளனர். பழனிசாமி தமிழகத்திற்கு மட்டும் துரோகம் செய்தவர் இல்லை. தன்னை வளர்த்த கட்சிக்கும் துரோகம் செய்தவர்.
தன்னை பதவியில் அமர வைத்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் கட்சியை விட்டு விலக்கியவர். எனவே எடப்பாடி பழனிசாமியால் வருகிற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற முடியாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் 2-வது முறையாக ஆட்சி பொறுப்பில் அமரும்போது தி.மு.க.வால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இளைஞர்கள், பெண்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.