தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்.
200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு சாத்தியப்படுமா?
நான் எந்த எண்ணிக்கைகளுக்குள்ளும் போக விரும்பவில்லை. நிச்சயமாக சிறப்பான வெற்றியை தி.மு.க. கூட்டணி பெறும்.
பெரும்பாலான இளைஞர்கள் விஜய் பக்கம் இருப்பதாக சொல்கிறார்களே?
எல்லா வாக்குகளையும் எண்ணிய பிறகு உண்மை என்ன என்று தெரியும்.
1971-க்கு பிறகு தி.மு.க. 2-வது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை என்று கூறுகிறார்காளே?
வரலாறு திரும்பும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வாக்குப் பதிவு சதவீதம் உயரும் என்று நம்புகிறீர்களா?
நிச்சயமாக உயரும். மக்கள் ஆர்வத்துடன் வந்து அதிகமாக வாக்களிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்று நினைக்கக் கூடிய மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
முதல் முறை வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
உங்களுடைய எதிர்காலத்திற்காக கொஞ்சம் சிந்தித்து ஓட்டு போடுங்கள்.
எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருக்கும் என்று நினைக்கிறீர்களா? த.வெ.க. இருக்கும் என்று விரும்புகிறீர்களா?
எனக்கு எந்த விருப்பமும் இல்லை. எதிர்க்கட்சியை பற்றி நான் ஏன் விரும்ப வேண்டும். யார் வேண்டுமானாலும் வரட்டும். மக்கள் யாரை எதிர்க்கட்சியிலே அமர்த்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் வரட்டும்.
வாக்காளர்கள் எதை சிந்திக்க வேண்டும்?
நாட்டுக்கு எது நல்லது, நமது உரிமைகளை யார் பாதுகாப்பார்கள், நம்முடைய மொழியை, நமது பிள்ளைகளின் எதிர் காலத்தை தமிழ்நாட்டை பாதுகாக்கக் கூடியவர்கள் யார் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.