தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாததால் பிற கட்சிகளுடன் தவெக ஆதரவு கோரி வருகிறது. காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைத்த நிலையில் இன்னும் 6 தொகுதிகள் தேவைப்படுகிறது.
த.வெ.க. ஆதரவு கோரியது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், திமுக தயவோடு அதிமுக ஆட்சி அமைக்க போவதாக பரவும் செய்திகள் வெறும் வதந்தி என்று திமுக எம்பி கனிமொழி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:
* சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
* திமுக தயவோடு அதிமுக ஆட்சி அமைவதாக பரவும் செய்திகள் வெறும் வதந்தி.
* திமுக - அதிமுக கூட்டு என்ற வதந்திகளுக்கு பதில் கூற முடியாது.
* ஆளுநரே தேவையில்லை என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.
* மக்களின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். ஜனநாயகத்தில் அதுவே மிக முக்கியம் ஆகும்.
* திமுக - அதிமுக கூட்டணி குறித்த ஊகங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. அதிமுக தரப்பில் கூறும் கருத்துகள் குறித்தும் எதிர்வினையாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.