தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பச்சிளம் குழந்தைகளையும், சிறுவர்களையும் அரசியல் பிரசாரத்தில் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் பிரசாரத்தின் போது சிறுவன் ஒருவரை அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுத்தி, அரசியல் கருத்துகளை பேச வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறைகள் தெளிவாக உள்ள நிலையில், ஒரு சிறுவனை அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியிருப்பது மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் அரசியல் ஆயுதங்கள் அல்ல; அவர்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படும் பகடைக்காய்களும் அல்ல. அவர்களின் பிஞ்சு மனதையும், அறியாமையையும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
அரசியல் தலைவர்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது வெறுப்பையும் அரசியல் வன்மத்தையும் அல்ல; கல்வி, சமத்துவம், ஜனநாயகம் மற்றும் நல்லொழுக்கத்தையே.
ஒரு அரசியல்வாதியின் உண்மையான கடமை, குழந்தைகளின் கையில் புத்தகத்தை கொடுப்பதே!
குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாப்பது தான் அரசியலின் உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தும் போக்கு இனியாவது முற்றுப்பெற வேண்டும்.
இவ்வாறு கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.