கந்த சஷ்டி திருவிழாவில் கலந்து கொண்டு விரதம் மேற்கொள்வதற்காக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலையில் இருந்தே வரத்தொடங்கினர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோவில் வளாகத்தில் உள்ள யாகசாலை மண்டபத்தில் இன்று காலை யாக பூஜையுடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு அதிகாலை 5.20 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு காலை 7 மணிக்கு யாகபூஜை தொடங்கியது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று மாலையில் 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் திருவாடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
அங்கு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. கந்த சஷ்டி திருவிழாவில் கலந்து கொண்டு விரதம் மேற்கொள்வதற்காக தமிழகம்,கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலையில் இருந்தே வரத்தொடங்கினர். அவர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக கொட்டகையில் இடம் பிடித்து தங்கினர். அவர்கள் இன்று காலை கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினர். ஏராளமான பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருவிழாவான 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் கடற்கரையில் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறுகிறது. நண்பகல் 12.45 மணிக்கு சண்முகவிலாசம் மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனைக்கு பின் பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து, தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் மாலை 4மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 16-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று, இரவு 11மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.