தமிழக செய்திகள்

பழனி கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்

சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை 11.30 மணிக்கு அனைத்து கட்டணச் சீட்டுகளும் நிறுத்தப்பட்டது.

கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் பழனி, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு படையெடுத்தனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டியும் முக்கியமான ஒன்றாகும். ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை பிரதமையில் தொடங்கி 6-வது நாள் சஷ்டியில் நிறைவடையும். இந்த நாட்களில் விரதம் மேற்கொண்டு வரும் பக்தர்கள் சூரசம்ஹாரத்தை கண்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

கந்தசஷ்டி

அதன்படி இந்த ஆண்டு கடந்த 10ம் தேதி பழனியில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு பூஜைகள், அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டது. சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு மலைக்கோவிலில் விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு விளா பூஜையும் நடைபெற்றது. கந்தசஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் திருவாவினன்குடி கோவிலில் வாழைத்தண்டு, பழங்கள், தயிர் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட தண்டு கூட்டுப் பிரசாதத்தை சாப்பிட்டு தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால் கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் பழனி, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு படையெடுத்தனர்.

இதனால் அடிவாரம், கிரிவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது.

தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு

சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை 11.30 மணிக்கு அனைத்து கட்டணச் சீட்டுகளும் நிறுத்தப்பட்டது. படிப்பாதை, வின்ச் மற்றும் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், இன்று தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. நாளை முதல் வழக்கம்போல் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது.

சூரசம்ஹாரம்

இதைத்தொடர்ந்து மதியம் 3 மணிக்கு பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சன்னதி திருக்காப்பிடப்பட்டு தொடர்ந்து சுவாமி புறப்பட்டு கிரிவீதிக்கு எழுந்தருள்வார். மாலை 6 மணிக்கு மேல் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

வடக்கு கிரிவீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரவதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இந்த சூரர்களின் தலை ஒரே மரத்தால் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சூரர்கள் உருவ பொம்மைகள் தயார் செய்யப்பட்டு கிரிவீதிகளுக்கு கொண்டு வரப்பட்டது. சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி மீண்டும் மலைக்கோவிலுக்கு எழுந்தருளிய பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெற்று ராக்கால பூஜை நடைபெறுகிறது.

திருக்கல்யாணம்

தொடர்ந்து நாளை (16-ந்தேதி) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மலைக்கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வசேனா சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் பெரியநாயகியம்மன் கோவிலில் வள்ளி, தெய்வசேனா சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதையொட்டி சுவாமி மலைக்கோவிலுக்கு திரும்ப எழுந்தருளியதும் வழக்கப்படி உரிய பூஜைகள் நடைபெற்று ராக்கால பூஜை நடைபெறும்.

விழாவில் பங்கேற்காத கோவில் யானை

பழனி கோவில் யானை கஸ்தூரி கந்தசஷ்டி விழாவின் முதல் நாளில் யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படும். காப்புக்கட்டி விழா தொடங்கியதும், 6 நாட்கள் யானை மலைக்கோவிலில் தங்கி இருக்கும். தங்கரத புறப்பாடு, சூரசம்ஹாரம், வெற்றிவிழாவில் பங்கேற்று பெரியநாயகி அம்மன் கோவில் அருகே உள்ள தங்கும் இடத்திற்கு வந்து சேரும். கஸ்தூரி யானைக்கு 61 வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு சஷ்டிவிழாவில் பங்கேற்வில்லை. கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்தலின் படி இந்த ஆண்டும் யானை சஷ்டி விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.

SCROLL FOR NEXT