தமிழக செய்திகள்

கந்த சஷ்டி விழா தொடக்கம்: விரதம் இருக்கும் முருக பக்தர்களுக்கு ஆளுநர் அர்லேகர் வாழ்த்து

கந்த சஷ்டி முருக வழிபாட்டின் முக்கிய நிகழ்வு! பக்தி, வைராக்கியம், வெற்றி என்ற மூன்றும் கந்தசஷ்டி விரதத்தின் அங்கங்கள்.

தீபாவளி நிறைவுற்ற பின்னர் அடுத்து வரும் 6 நாட்களும் உண்ணா நோன்பு இருந்து சஷ்டி வழிபாடு நடத்தும் முருக பக்தர்களை வாழ்த்துவதோடு அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் பிரார்த்திக்கிறேன் என்று ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தணி, திருப்போரூர், வல்லக்கோட்டை, சிறுவாபுரி, வடபழனி உள்ளிட்ட முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் இன்று விரதத்தை தொடங்கி உள்ளனர்.

கந்த சஷ்டி தொடங்கியதை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கந்த சஷ்டி முருக வழிபாட்டின் முக்கிய நிகழ்வு! பக்தி, வைராக்கியம், வெற்றி என்ற மூன்றும் கந்தசஷ்டி விரதத்தின் அங்கங்கள். முருகனின் மீது மிகவும் பக்தி கொண்டு 6 நாட்கள் கடும் விரதமிருப்பர்.

பலர் 6 நாட்களும் கோவில் வளாகத்திலேயே தங்குவர். பலர் திரவ உணவு கூட எடுக்காமல் கடும் வைராக்கியத்துடன் இருப்பர். இதனால் மனவலிமை, சரீர சுத்தி ஏற்படுகிறது. ஆறாம் நாள் சூரசம்ஹாரம் நடைபெற்ற பின்பு வெற்றியுடன் விரதத்தை நிறைவு செய்கின்றனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறி வெற்றிக் களிப்பு அடைகின்றனர்.

தேவராய சுவாமிகள் இயற்றிய கந்தசஷ்டி கவசம் உலகமெங்கும் புகழ் பெற்ற பக்திப் பாமாலை. அதை தவறாது படிக்க மனசுத்தி, சரீர சுத்தி, சரீர பாதுகாப்பும் ஏற்படும். “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது “சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழியின் திரிபு. சஷ்டியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் பையான கருப்பையில் குழந்தை வரும் என்பது குழந்தைப்பேறு வேண்டுகின்ற மகளிர்க்கு ஞானிகள் அருளிய வாக்கு.

தீபாவளி நிறைவுற்ற பின்னர் அடுத்து வரும் 6 நாட்களும் உண்ணா நோன்பு இருந்து சஷ்டி வழிபாடு நடத்தும் முருக பக்தர்களை வாழ்த்துவதோடு அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT