நெல்லையில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுப்பதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநகர் மாவட்ட தலைவர் ராமேஷ்வரன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ராபர்ட் புரூஸ் எம்.பி. முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சங்கரபாண்டியன், உமாபதி சிவன் ஆகியோர் அருகருகே நின்றனர். அப்போது புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுப்பது தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இருவரும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கி மோதிக் கொண்டனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நிர்வாகிகள், மோதலில் ஈடுபட்ட 2 பேரையும் சமாதானப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களிலும் பரவி வருகிறது.
புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுப்பதில் மூத்த நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து, மோதலில் ஈடுபட்ட முன்னாள் மாவட்ட தலைவர்கள் உமாபதி சிவன், சங்கர பாண்டியன் ஆகியோருக்கு "உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது?" என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.