தமிழக செய்திகள்

ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கையல்ல; மாணவர்கள் நல்ல அரசியலை பழக வேண்டும்: கமல்ஹாசன் அறிவுரை!

அரசியல்வாதிகளுக்கு மக்களின் வாக்குகள் சிதறிக் கிடப்பது மட்டும்தான் கண்ணில் தெரியும், அவர்களின் ஏழ்மை தெரிவதில்லை.

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, மாணவர்கள் மற்றும் இன்றைய இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு குறித்து அவர் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அரசியல் எனக்கு தொழில் அல்ல:

"எனக்கு அரசியல் என்பது ஒரு தொழில் கிடையாது. எனது தந்தை போன்றவர்களும், பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் போன்ற தலைவர்களுமே எனக்கு அரசியலைக் கற்றுக்கொடுத்தவர்கள். அவர்கள் வழியிலான அரசியலையே நானும் பின்பற்றுகிறேன்.

கல்வி நிறுவனங்களில் நான் பேசக் கூடாது என்பதற்காகவே, 'பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியல்வாதிகள் யாரும் பேசக்கூடாது' என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு கட்டுப்பட்டு நானும் பேசாமல் இருந்தேன், ஆனால் அது தவறு என்பதை இப்போது உணர்கிறேன்."

சுயலாப அரசியல்வாதிகள்:

"என் கட்சிக்காக மட்டுமல்லாமல், ஒவ்வொரு கல்லூரியிலும் நாட்டின் எதிர்காலத் தலைவர்களைத் தேடித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். பெரியார் குறிப்பிட்டதைப் போல இங்கு யாரும் முழு நேர அரசியல்வாதி இல்லை.

சுயலாபத்திற்காக அரசியல் செய்பவர்களே முழுமையான தொழில்முறை அரசியல்வாதிகள். மக்களுக்காகப் பணி செய்ய வந்துள்ளதாக நான் நாடகம் நடத்த விரும்பவில்லை.

நாட்டில் ஊழல் இருக்கிறது என்று வெறும் குற்றம் சாட்டினால் மட்டும் போதாது. லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால், அதில் கொடுப்பவர்களின் கையும் உள்ளது என்பதை மறக்கக் கூடாது. கொடுக்கும் கை நீளும் போதுதான், வாங்கும் கையும் நீளத் தொடங்குகிறது."

தகுதி வரும்போது முதல்வர் பதவி:

"நான் திரைத்துறைக்கு வந்தபோது ஒரு நட்சத்திரமாகவோ அல்லது இயக்குநராகவோ வரவில்லை. எனது தகுதியின் காரணமாகவே அந்த நிலையை அடைந்தேன். அதேபோல், நான் இப்போது முதலமைச்சராகவும் வரவில்லை. அதற்கான தகுதி வரும்போது, மக்கள் அந்தப் பதவியை எனக்குக் கொடுப்பார்கள். அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

அரசியல்வாதிகளுக்கு மக்களின் வாக்குகள் சிதறிக் கிடப்பது மட்டும்தான் கண்ணில் தெரியும், அவர்களின் ஏழ்மை தெரிவதில்லை. இங்கு ஏழ்மை என்பது திட்டமிட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே காரணம்."

ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கையல்ல!

"மாணவர்கள் அனைவரும் நடப்பு அரசியலை உற்று கவனிக்க வேண்டும். 'ரீல்ஸ் வீடியோக்களில் நல்லது, கெட்டது என இரண்டுமே உள்ளன. அதில் பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் அப்படித்தான். அதனை வியாபாரமாக்காத வரை, கற்றுக் கொள்பவர்களுக்கு அது மிகவும் நல்லது. எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தைத் தெரியாது என்று சொல்லும் தைரியம் எனக்கு எப்போதும் உண்டு.

எதிர்காலத்தில் எங்களைத் தவிர்த்துவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை நாங்கள் உருவாக்குவோம். மாணவர்கள் நல்ல அரசியலைப் பழகிக் கொள்ள வேண்டும்.

மக்களுக்காக உழைக்கும் நல்ல அரசியல்வாதி யார் என்பதை அடையாளம் காணும் வயது உங்களுக்கு வந்துவிட்டது. ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்," என்று கமல்ஹாசன் பேசினார்.