kamal - thirumavalavan  
தமிழக செய்திகள்

Kamal | திமுகவுக்கு ஆதரவு... தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த கமல் - திருமாவளவன் பாராட்டு

கமலின் முடிவை பாராட்டி விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாலை மலர்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளது.

இந்நிலையில் இத்தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடவில்லை எனவும், திமுக கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கமலின் முடிவை பாராட்டி விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை.

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் கமல்ஹாசன் அவர்களின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும்.

நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது.

திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ' வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும்.

அரசியல் ஆதாயத்திற்காகவோ தான்தோன்றித் தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், 'நாங்கள் போட்டியிட விரும்பவில்லை' என்றும்; திமுக.தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்" என்றும்; அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும்.

அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்! மாண்புநிறை அண்ணனுக்கு மனம்நிறைந்த பாராட்டுகள்!" என்று தெரிவித்தார்.