டிடிவி தினகரன் 
தமிழக செய்திகள்

தவெக எம்எல்ஏ விவகாரம்: இனியாவது நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம் போல வேடிக்கை மட்டும் பார்பாரா முதலமைச்சர்- தினகரன்

குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும் பேசிய ஆளுங்கட்சியினரின் குரூரமான மனநிலை மிகவும் ஆபத்தானது.

இனியும் காலம் தாமதிக்காமல் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதோடு, அவருக்கு ஆதரவாகவும் மக்களை திசைதிருப்பும் நோக்கிலும் பேசிய ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்,

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனக்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் முறையான புகாரை அளித்திருப்பதாக இன்று நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெட்கக்கேடானது

அப்படி ஒன்று நடக்கவே இல்லை, அது வெறும் வதந்தி, எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட அவதூறு, மாவட்ட ஆட்சியரே புகார் அளித்தால் விசாரிப்போம் என வாய்க்கு வந்தபடியும், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் வகையிலும் பேசிக் கொண்டிருந்த தவெக அமைச்சரவையின் வெத்துவேட்டு பேச்சாளர்களும், வாய்ச்சொல் வீரர்களோடு இரண்டு அமைச்சர் பதவியைப் பாதுகாக்கப் பாவம், புண்ணியம் எனப் பேசி தற்போது உண்மை வெளிவந்தவுடன் பல்டி அடித்திருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவரும் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் ஆட்சியரிடம் அநாகரிகமாக நடந்து, தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், தன் சொந்தக் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய முதலமைச்சரே, அது குறித்து தற்சமயம் வரை வாய் திறக்காமல் அவரைப் பாதுகாக்க முயன்றிருப்பது வெட்கக்கேடானது.

தவெக எம்.எல்.ஏ. தொடர்பான புகாரின் மீது அடிப்படை விசாரணையை மேற்கொள்ளத் தவறிய காவல்துறையை விட, குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும் பேசிய ஆளுங்கட்சியினரின் குரூரமான மனநிலை மிகவும் ஆபத்தானது.

மனம் பதறுகிறது

அரசு நிர்வாகத்தின் பெண் உயர் அதிகாரிக்கு தவெக எம்.எல்.ஏ. செய்த இத்தகைய இழிசெயல் சமூக வலைத்தளங்களில் தொடங்கி, அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், தேசிய மகளிர் ஆணையம், மாண்புமிகு நீதிபதி என அத்தனை நிலைகளையும் கடந்து, உயர்நீதிமன்றத்தின் மூலமாகத்தான் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், இந்தத் தரங்கெட்ட தவெக ஆட்சியில் சாமானிய பெண்களின் நிலையைச் சிந்தித்துப் பார்க்கவே மனம் பதறுகிறது.

எனவே, இனியும் காலம் தாமதிக்காமல் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதோடு, அவருக்கு ஆதரவாகவும் மக்களை திசைதிருப்பும் நோக்கிலும் பேசிய ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

SCROLL FOR NEXT