சென்னையை சேர்ந்த அ.தி.மு.க. வக்கீல் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்து உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இம்மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளை கேட்டு விளக்கம் அளிக்கும்படி அரசு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து இன்று இம்மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக காவல்துறை தரப்பில் தகவல் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது ஆட்சியர் புகார் அளித்துள்ளார் என்றும் அதன் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, முதல் தகவல் அறிக்கையை பதிவேற்றம் செய்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
இந்த விவகாரத்தில் மீடியாவும் முறையாக இருக்கும் என நம்புகிறேன்.
மெசேஜ் விவரங்கள் இணையத்தில் சுற்றி வருவது ஏன்? பதிவுகளை ஏன் உடனடியாக நீக்கவில்லை.
பெண்களுக்கு எதிரான பதிவுகளை நீக்குமாறு வேறு வழக்கில் ஏற்கனவே கூறியுள்ளேன், அதை ஏன் நீக்கவில்லை என்று தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பதிவுகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி: தலைமைச் செயலாளர், தூய்மை பணியாளர் என யாராக இருந்தாலும் பாலியல் தொல்லையில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும். இந்த வழக்கில் விசாரணை அதிகாரி யார்? என்று கேள்வி எழுப்பினார்.
அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் தான் வழக்கை விசாரிப்பதாக காவல்துறை விளக்கம் அளித்தது.
நீதிபதி: எம்எல்ஏ சம்பந்தப்பட்டுள்ள நிலையில் மகளிர் போலீசார் எப்படி விசாரிக்க முடியும்.
எஸ்.பி. அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரி விசாரணை நடத்தினால் தான் சரியாக இருக்கும். ஐ.ஜி. அல்லது டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரணையை கண்காணிக்க வேண்டும்.
கலெக்டர் விவகாரத்தில் ஜூலை மாதமே நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்சனை பெரிதாகியிருக்காது. இந்த வழக்கை ஐஜி, டிஐஜி அந்தஸ்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். புகார் அளித்த பெண் கலெக்டரை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். தனது தரப்பு வாதமும் கேட்கப்பட வேண்டும் என ஆட்சியர் தரப்பு கூறியதால் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டார்.
இறுதி அறிக்கையை டிச.22-ந்தேதியன்று தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம் என்று நீதிபதி தெரிவித்தார்.