தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம்: தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்!

சம்பந்தப்பட்ட நபர் வகிக்கும் பதவியைப் பொருட்படுத்தாமல், டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து விசாரணை நடைபெற வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு, கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது தேசிய மகளிர் ஆணையம்.

மாவட்ட ஆட்சியர் மூத்த அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் முறையீடுகள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றை விசாரிப்பது உட்பட, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர் வகிக்கும் பதவியைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு அரசியல் அல்லது வெளிப்புறத் தலையீடுமின்றி இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

7 நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் கோரியுள்ளது.

தமிழ்நாடு அரசு நடவடிக்கை என்ன?

இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததா, இல்லையா என்றுகூட அரசு விளக்கவில்லை, விசாரணையும் நடத்தவில்லை.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் கணவரான, மற்றொரு ஆட்சியரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை.

அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், தமிழ்நாடு அரசும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடவில்லை. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

SCROLL FOR NEXT