தமிழக செய்திகள்

களியக்காவிளை அருகே தொழிலாளியை வெட்டிக்கொன்ற கொலையாளி கேரளத்துக்கு ஓட்டம்

திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோசப், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜோசப்(வயது50). தொழிலாளியான இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தன்று படந்தாலுமூடு பகுதியில் உள்ள மதுபாரில் ஜோசப் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து டிப்-டாப் உடையில் வந்த மர்ம நபர், வெட்டுக்கத்தியால் ஜோசப்பை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோசப்பை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

கேமரா

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஜோசப்பை வெட்டிய நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க சம்பவம் நடந்து பார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

தகராறு

அதில் ஜோசப்பை வெட்டியது அவரது மனைவியின் சகோதரியின் கணவரான மீனச்சல் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(40) என்பது தெரியவந்தது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மணிகண்டனுக்கு மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். ஜோசப் மது அருந்திவிட்டு மணிகண்டனின் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததுடன், அவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் ஊருக்கு வந்த பிறகு, ஜோசப்பின் தொல்லை மேலும் அதிகரித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், படந்தாலுமூடு மதுபாரில் மது அருந்திக் கொண்டிருந்த ஜோசப்பை வெட்டுக்கத்தியால் தாக்கியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

கொலை வழக்கு

இதற்கிடையே திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோசப், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றினர். இதற்கிடையே தலைமறைவான மணிகண்டனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் கேரளத்துக்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது. மணிகண்டனை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்தனர்.

SCROLL FOR NEXT