போராட்டத்தில் 100 வயதை கடந்த ஏராளமான மூதாட்டிகளும் பங்கேற்றனர். மூலக்கரையைச் சேர்ந்த 110 வயதான கருப்பாயி என்பவர் போராட்டத்தில் பங்கேற்று பேசிய போது, நான் பிறந்தது இந்த ஊரில்தான். 4 தலைமுறைகளை பார்த்து விட்டேன்.
தேனி மாவட்டம் கடமலைமயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு, சிங்கராஜபுரம், நரியூத்து, பசுமலைதேறி, பூசனூத்து உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் பட்டா இல்லாத குடும்பங்களை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வனத்தையும், விலங்குகளையும் பாதுகாத்து வருவதால் தங்களுக்கு 2006 வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும், வனத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும், இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்து மீண்டும் மறு அளவீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் கடமலைக்குண்டுவில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அதன்படி கடமலைக்குண்டுவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடினர். புதிய பஸ் நிலைய வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு நாளை (29-ந் தேதி) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் அப்போது தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் போராட்டம் நடத்தியவர்களை சந்தித்து ஆதரவை தெரிவித்தார். இன்று கடமலைக்குண்டுவைச் சேர்ந்த அனைத்து வியாபாரிகளும் போராட்டத்துக்கு ஆதரவாக பேரணியாக சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இரவில் செல்போனில் டார்ச் லைட் அடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் 100 வயதை கடந்த ஏராளமான மூதாட்டிகளும் பங்கேற்றனர். மூலக்கரையைச் சேர்ந்த 110 வயதான கருப்பாயி என்பவர் போராட்டத்தில் பங்கேற்று பேசிய போது, நான் பிறந்தது இந்த ஊரில்தான். 4 தலைமுறைகளை பார்த்து விட்டேன். இந்த கிராமத்தை விட்டு குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என்றால் எங்கே செல்வது? என்னைப் போலவே பலரும் 3, 4 தலைமுறைகள் கண்டவர்கள் உள்ளனர். எனவே தமிழக அரசு எங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.