பெ சண்முகம்
தமிழக செய்திகள்

அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? சி.பி.எம். சண்முகம் கேள்வி

கபினி அணைக்கு அதிக அளவில் நீர் வருவதால் கர்நாடக அரசு 25 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட்டுள்ளது.

காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது என பெ. சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காவிரியில் தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுப்பு தெரிவித்தது. இதனால் மேட்டூர் அணை வரண்டு காணப்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் நாள் ஒன்றுக்கு 3500 கனஅடி விதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

அப்போது அணைகளில் தண்ணீர் இல்லை. தண்ணீர் திறந்து விட முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்். மேலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று அங்குள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று போராட்டம் நடத்தினர்.

கனமழை

இதற்கிடையே கபினி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு அதிக அளவில் நீர் வந்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பிற்காக நேற்று மாலை 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இது 10 ஆயிரம், 25 ஆயிரம் கனஅடி நீர் என அதிகரித்தது.

குடிநீருக்கே தண்ணீர் இல்லை என்று கர்நாடக மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார். தற்போது உடனடியாக அணை நிரம்பியது எப்படி? என சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பெ. சண்முகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து இன்று (நேற்று) வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பும் என்று கர்நாடக முதலமைச்சரே சொல்லியிருக்கிறார்.

காவிரி கண்காணிப்புக் குழு

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை, குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும் என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர்.

இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது!

இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.