தமிழக செய்திகள்

விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க செல்போன்கள்தான் முக்கிய காரணம் - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து மனிதர்களை பாதுகாப்பது இப்போதைக்கு அவசியமாகிறது.

சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த விழா ஒன்றில் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

நீதித்துறையில் ஏ.ஐ.யின் தாக்கம் தொடங்கியுள்ளது. சில நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்புகளில் ஏ.ஐ. வழங்கிய மேற்கோள்கள் இடம் பெற்று இருக்கின்றன. அந்த மேற்கோள்கள் எந்த கோர்ட்டும் பிறப்பிக்காத உத்தரவுகளை தெரிவிக்கின்றன. இது அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. என்னை போன்றவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை. ஏனென்றால் நான் ஏ.ஐ. உதவியை நாடுவதே இல்லை.

சென்னை ஐகோர்ட்டில் எனக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதற்காக கணினியில் ஏ.ஐ. உள்பட நவீன தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் இருக்கிறது. தற்போதைய காலத்தில் மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது இயலாத காரியமாக இருக்கிறது. ஒரு விஷயத்தில் நமது முழு கவனத்தையும் செலுத்தினால்தான் வெற்றி பெற இயலும்.

பல ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி இருக்கிறேன். சில ஆண்டுகளாக நீதிபதியாகவும் பணியாற்றி வருகிறேன். ஏராளமான வழக்குகளை கையாண்டு இருக்கிறேன். ஆனால் கணவன்-மனைவிக்கு இடையேயான விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க செல்போன்கள்தான் முக்கிய காரணம். செல்போன்களால் மனிதர்களுக்கு இடையிலான உறவுகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன. தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து மனிதர்களை பாதுகாப்பது இப்போதைக்கு அவசியமாகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT