தமிழக செய்திகள்

அப்படியே "மஞ்சுமல் பாய்ஸ்"..! 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்- நள்ளிரவில் நடந்த திக் திக் மீட்புப் பணி

தடைசெய்யப்பட்ட பகுதியில் செல்பி எடுக்க முயன்றபோது தவறி 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்.

மாலை மலர்

கேரள திரைப்படமான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சுற்றுலா செல்வதும், அப்போது அவர்களில் ஒருவர் பள்ளத்தில் தவறி விழுந்து உயிருக்கு போராடுவது, நண்பர்கள் மற்றும் வனத்துறையினர் அவரை போராடி மீட்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

அதுபோன்று ஊட்டிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணி ஒருவர் 150 அடி பள்ளத்தில் விழுந்து அந்த படத்தில் வருவது போன்று அப்படியே படுத்து கிடந்த சம்பவம் நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்தவர் சிவகுருநாதன்(வயது28). இவர் சில தினங்களுக்கு முன்பு ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். ஊட்டியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்தார்.

அதன்பின்னர் சிவகுருநாதன் நேற்று ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனை சுற்றுலா பகுதிக்கு சென்றார்.

150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்

அங்கு காட்சிமுனையை சுற்றி பார்த்து ரசித்த அவர், தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அங்கிருந்தபடி செல்பி எடுக்க முயன்ற அவர் திடீரென நிலைதடுமாறி அங்குள்ள 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.

இதனை மற்ற சுற்றுலா பயணிகள் கவனிக்கவில்லை. இதனால் அவர் பள்ளத்தில் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. பள்ளத்தில் விழுந்த வாலிபர் படுகாயத்துடன் அங்குள்ள பாறைமீது படுத்தபடி கிடந்தார்.

மேலும், தன்னை காப்பாற்றுங்கள் என்று பள்ளத்தில் இருந்து அபயகுரல் எழுப்பினார். ஆனால் அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், சுற்றுலா பயணிகள் இல்லாததாலும் அவரது சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

இதையடுத்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சிவகுருநாதன், ஊட்டியில் தான் தங்கி இருந்த விடுதியை தொடர்பு கொண்டு, தான் பள்ளத்தில் விழுந்துவிட்டதாக தெரிவித்தார்.

உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னரே வாலிபர் ஒருவர் ஊசிமலை காட்சிமுனையில் உள்ள 150 அடி பள்ளத்தில் விழுந்த விவரம் அனைவருக்கும் தெரியவந்தது.

இதையடுத்து கூடலூர் வன அலுவலர் தேவராஜ், நடுவட்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாலிபர் எந்த பகுதியில் விழுந்து கிடக்கிறார் என்பதை கண்டறிய டிரோனை பறக்கவிட்டு தேடினர்.

அப்போது 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர் பாறையில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருப்பதை வனத்துறையினர் மற்றும் போலீசார் உறுதி செய்தனர்.

இதனை தொடர்ந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தினர். வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கினர்.

ஆனால் வாலிபர் படுகாயம் அடைந்து இருந்ததால் அவரை கயிறு மூலம் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. வாலிபர் பள்ளத்தில் விழுந்த பகுதி யானை நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால், வனத்துறையினர் தீ மூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகம் அவசர ஆலோசனை மேற்கொண்டது.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி எம்.பி.ஆ.ராசா உடனடியாக குன்னூர் வெலிங்டன் ராணுவ மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி கூறினார்.

இதனை தொடர்ந்து குன்னூர் ராணுவ மையத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மீட்பு உபகரணங்களுடன் கூடலூர் ஊசிமலை காட்சிமுனைக்கு புறப்பட்டனர்.

நேற்று இரவு 10 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்ற ராணுவ வீரர்கள் மீட்பு பணியை தொடங்கினர். இதற்கிடையே வாலிபர் பள்ளத்தில் விழுந்த தகவல் அறிந்ததும் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமிபவ்யா தண்ணீரு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தினர்.

தொடர்ந்து ராணுவ வீரர்கள் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கினர். அத்துடன் வாலிபரை மீட்டு மேலே கொண்டு வருவதற்கான உபகரணங்களையும் கையோடு எடுத்து சென்றனர்.

12 மணி நேரத்திற்கு பின் மீட்பு

மாலை 3 மணியளவில் தொடங்கிய மீட்பு பணியானது நள்ளிரவை தாண்டியும் நீடித்தது. சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பின் இன்று அதிகாலை 3 மணியளவில் 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் சிவகுருநாதன் உயிருடன் மீட்கப்பட்டார். அவரை ராணுவ வீரர்கள் மீட்டு, டோலி கட்டி தூக்கி பள்ளத்தில் இருந்து மேலே கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட வாலிபருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிவகுருநாதன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சுற்றுலாவுக்கு வந்த வாலிபர் 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்து 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் நீலகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.