சென்னையில் பிரிக்ஸ் அறிவியல் அமைச்சர்கள் மாநாடு நேற்று நடந்தது. அதில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் நிலை உயர்வு அடைந்து இருக்கிறது என்றார்.
சென்னையில் 14-வது பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மந்திரிகள் கூட்டம் நடை பெற்றது. இதில் பிரிக்ஸ் அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள இந்தியா உள்பட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் வரவேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறைகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. 2026-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கிறது.
இதற்காக, 'மீண்டு எழும் திறன், புதிய கண்டுபிடிப்புகள், ஒத்துழைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி' என்ற கருப்பொருளை இந்தியா தேர்வு செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, குவாண் டம் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களால் உலகம் வேகமாக மாறி வருகிறது. இந்தத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.
அதேநேரத்தில், இந்த புதிய தொழில்நுட்பங்களின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அவை மலிவானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும். இதற்கு நாடுகளுக்கு இடையிலான ஒத்து ழைப்பு அவசியம்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. தேசிய குவாண்டம் இயக்கம், தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம், பயோஇ3 கொள்கை, தேசிய புவிசார் கொள்கை உள்ளிட்ட திட்டங்கள் இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், நாட்டின் அறிவியல் திறனை வளர்க்கவும். பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும் கொண்டு வரப்பட்டுள்ளன.
பிரிக்ஸ் நாடுகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இணைந்து செயல்படுவதன் மூலம், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்.
சென்னையில் நடைபெற்ற இந்த மாநாடு, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான அறிவியல் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.