சென்னை:
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாகனங்களில் கடத்தி செல்லப்படுகிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னையிலும் பறக்கும் படை சோதனை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற பறக்கும் படை சோதனையில் ரூ.28 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.நகர் நரசிம்மன் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பறக்கும் படை அதிகாரிகள் போலீசாரின் துணையுடன் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ. 28 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 776 மதிப்புடைய தங்கம், வெள்ளி பொருட்கள் இருந்தது. அதற்கு பறக்கும் படை அதிகாரிகள் ஆவணங்களை காட்டுமாறு தெரிவித்தனர். ஆனால் இந்த நகைகளை எடுத்துச் சென்றவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.
இதைத்தொடர்ந்து ரூ.28 கோடி மதிப்பிலான தங்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த நகைகள் அனைத்தும் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த நகைகள் அனைத்தும் சென்னையில் உள்ள பிரபல நகை கடைக்கு மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. விமானம் மூலமாக கொண்டு வரப்பட்ட நகைகள் அங்கிருந்து வாகனங்களில் நகை கடைக்கு எடுத்துச் செல்லப்பட்டதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து உரிய ஆவணங்களை காட்டி நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் அடுத்த பட்டரை பெருமந்தூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் போட்ட ஸ்டிக்கர்கள், கீ செயின்கள், மற்றும் 8000 ரூபாய்க்கான கூப்பன்கள் பெட்டி பெட்டியாக இருந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து திருவள்ளூரில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து திருவள்ளூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக இவை கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.