தமிழக செய்திகள்

அட்சய திருதியை முன்னிட்டு 19-ந்தேதி கூட்ட நெரிசலை சமாளிக்க நகை கடைகளில் சிறப்பு ஏற்பாடுகள்

தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள் அன்றைய தினம் கல் உப்பு, மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

அட்சய திருதியை வருகிற 19-ந்தேதி கொண்டாடப்பட இருப்பதையொட்டி கூட்ட நெரிசலை சமாளிக்க நகை கடைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை 3-ம் திதி, அட்சய திருதியை. "அட்சயம்" என்றால் குறைவில்லாதது, அழியாதது, என்றும் பெருகிக் கொண்டே இருப்பது என்றும் பொருள். இந்த நாளில் செய்யப்படும் நற்செயல்கள், பூஜைகள், தானங்கள் பல மடங்கு வளர்ந்து, வாழ்வில் செல்வம், சுகம், ஆனந்தம் தரும் என்று நம்பிக்கையாகும்.

இந்த புனித நாளில் தான் பரசுராமர் அவதரித்தார். மகாலட்சுமி அருள் அதிகரிக்கும் நாள். குபேரன் செல்வத்தை பெற்ற நாள் எனவும் கூறப்படுகிறது. ஆகவே இந்த நாள் செல்வமும், புண்ணியமும் இரட்டிப்பாகும் அரிய தருணமாகும்.

இதுஒரு புறமிருக்க, பொதுமக்கள் நகைகளை வாங்குவதையும் பழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் சென்னையில் உள்ள நகை கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, 'அட்சய திருதியை வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று காலை 10.49 மணியிலிருந்து 20-ந்தேதி காலை 7.27 மணி வரை கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, 19-ந்தேதி காலை 10.49 மணியிலிருந்து பகல் 12.20 மணி வரை நகை வாங்க சிறந்த நேரமாகக் கருதுகின்றனர். கூட்ட நெரிசலை சமாளிக்க அன்றைய தினம் காலை 6 மணி முதல் சிறப்பு விற்பனை, முன்பதிவு வசதி மற்றும் சிறப்பு தள்ளுபடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு, லட்சுமி குபேர பூஜைகளுடன் தங்கம், வைர நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் கடந்த 10 நாளில் எந்த நாளில் விலை குறைவாக இருக்கிறதோ அன்றைய விலையிலும், முன்பதிவு செய்யப்பட்ட நாளில் உள்ள விலைக்கே அட்சய திருதியை நாளில் நகை விற்பனை செய்யப்படும்' என்றார்.

தங்கம், வெள்ளி மற்றும் அசையா சொத்துக்கள் வாங்க சிறந்த நாளாக இது கருதப்படுகிறது. தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள் அன்றைய தினம் கல் உப்பு, மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும்.

அட்சய திருதியை அன்று தானங்கள் செய்வது அட்சய பலனை அளிக்கிறது. குறிப்பாக, உணவு, நீர் மோர், குடை வழங்கினால் மறுபிறவியில் ராஜயோகம். ஆடை தானம் செய்வதால் நோய்கள் நீங்கி உடல் நலம் பெறலாம். பழங்கள் தானம் செய்வதால் உயர்ந்த பதவியும் மரியாதையும் கிடைக்கும். நீர்மோர், பானகம் தானம் செய்வதால் கல்வியில் முன்னேற்றம், அறிவு வளர்ச்சி பெறலாம். தானிய தானம் செய்வதால் அகால மரணம் நீங்கி, ஆயுள் நீடிக்கும். தயிர் சாதம் தானம் செய்வதால் பாவ விமோசனம், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைப்பதாக கூறப்படுகிறது.