தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே, ஏரிக்குள்ளே ஜீப்பை நிறுத்திவிட்டு மது அருந்திவிட்டு தூங்கிய இரண்டு வாலிபர்கள், நள்ளிரவில் பெய்த கனமழையால் ஏரி நீர்மட்டம் உயர்ந்து ஜீப்புடன் தண்ணீரில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு ஜீப் ஒன்றில் அங்குள்ள குமாரசெட்டி ஏரிக்கு வந்துள்ளனர்.
அப்போது ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்ததால், வாலிபர்கள் இருவரும் தங்களது ஜீப்பை ஏரியின் உள்பகுதிக்கே கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர்.
பின்னர், ஏரிக்குள் வைத்தே இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
போதை தலைக்கேறிய நிலையில், இருவரும் வீட்டிற்குச் செல்லாமல் ஜீப்பிற்குள்ளேயே அசந்து தூங்கியுள்ளனர்.
அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில், மாரண்டஅள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் எதிர்பாராத விதமாகக் கடுமையான கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து திடீரென பலமடங்கு அதிகரித்தது.
விநாடிக்கு விநாடி ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த ஜீப் முழுமையாகத் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது.
நள்ளிரவில் திடீரென தூக்கம் கலைந்து எழுந்த வாலிபர்கள், தங்களைச் சுற்றித் தண்ணீர் சூழ்ந்து ஜீப் மூழ்கியிருப்பதை கண்டு அலறியடித்துக் கொண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக ஜீப்பிலிருந்து எப்படியோ தப்பிய வாலிபர்கள், அதிகாலையில் அப்பகுதி பொதுமக்களின் உதவியை நாடினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குத் திரண்ட கிராம மக்கள், தண்ணீருக்குள் மூழ்கிக் கிடந்த ஜீப்பை மீட்கப் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தனர்.
பின்னர், தண்ணீருக்குள் இறங்கி ஜீப்பில் தடிமனான கயிறுகளைக் கட்டி, பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஜீப்பை ஏரியிலிருந்து பத்திரமாக வெளியே மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் வாலிபர்கள் இருவரும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.
மதுபோதையில் ஏரிக்குள் காரை நிறுத்திவிட்டு, மழைநீரில் மூழ்கிய ஜீப்பை பொதுமக்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கயிறு கட்டி மீட்கும் மிரட்டலான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.
வாலிபர்களின் இந்த விபரீத செயலுக்குப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.