தமிழக செய்திகள்

Speaker | தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு

ஜே.சி.டி. பிரபாகரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் ச ஜோசப் விஜய் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் பதவிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் வேட்பு மனுவை சட்டப்பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசனிடம் தாக்கல் செய்தார்.

இன்று மாலையுடன் சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. ஆனால் ஜே.சி.டி. பிரபாகரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகிறார்.

துணை சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவிக்கவுள்ளார். துணை சபாநாயகராகும் ரவிசங்கர் திருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதியில் வெற்றி பெற்றவர். ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்.

மொத்தமாக 66,263 வாக்குகள் பெற்ற ரவிசங்கர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை 9,614 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத் 49,222 வாக்குகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கிய கவுசல்யா 8,436 வாக்குகளுடன் 4-ஆம் இடம் பிடித்தார்.