தமிழக செய்திகள்

விளைச்சல் அதிகரிப்பு எதிரொலி - வாசனை திரவிய ஆலைகளுக்கு செல்லும் மல்லிகை பூக்கள்

கோடை காலம் என்பதால் மல்லிகை பூ விளைச்சல் அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பவானிசாகர் கொத்தமங்கலம், ராஜன் நகர், புது வடவள்ளி சிக்கரசம்பாளையம், தயிர் பாளையம், இக்கரை தத்தபள்ளி, பகுத்தம்பாளையம், கெஞ்சனூர், தாண்டாம் பாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை செடிகள் பயிரிடப்பட்டுள்ளது

இங்கு விளையும் பூக்கள் தினமும் அதிகாலையில் பறிக்கப்பட்டு சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படும். அங்கு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் மல்லிகை பூக்கள் அதிகளவில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது கோடை காலம் என்பதால் மல்லிகை பூ விளைச்சல் அதிகரித்துள்ளது. மல்லிகைப்பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்தது போக மீதமுள்ள மல்லிகை பூக்களை வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது

நாளொன்றுக்கு 10 முதல் 15 டன் மல்லிகை பூக்கள் விளைச்சல் உள்ளதால் அனுப்பி வைக்கப்படும் 5 டன் பூக்கள் போக மீதி உள்ள 10 டன் பூக்களை வாசனை திரவிய ஆலை நிர்வாகம் கொள்முதல் செய்வதாகவும் வாசனை திரவிய ஆலைகளுக்கு கொண்டு செல்லும் மல்லிகை பூவுக்கு ஒரு கிலோ ரூ. 250 முதல் ரூ.280 வரை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.