தமிழ்நாட்டில் கோடை கால மின்சார பயன்பாடு 20 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், கோடைகால அதிகபட்ச தேவையை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மின் தட்டுப்பாடு வராது என்று மின்வாரியத் தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தாண்டு கோடைகால அதிகபட்ச மின்தேவையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்வாரியம் எடுத்துள்ளது. போதுமான நிலக்கரி இருப்பு உள்ளதால் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி சீராக இருந்து வருகிறது. மே 15-ந்தேதியில் இருந்து காற்று அதிகம் வீசும் என்பதால் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி அதிகரித்துவிடும். அதன் மூலம் போதுமான மின்சாரம் கிடைத்துவிடும்.
தமிழ்நாட்டில் நேற்றிரவு 19 ஆயிரத்து 421 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக மின்உற்பத்தி இருப்பதால் மின்சாரம் தட்டுப்பாடே தமிழ்நாட்டில் இல்லை. ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்படுவதற்கு உள்ளூர் கேபிள் பிரச்சனை காரணமாக இருக்கலாம். மற்றபடி, மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது. மின்சாரம் அதிகம் பயன்படுத்தும் நேரங்களில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நீண்டகால ஒப்பந்தமாக ஆந்திராவில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் 4 வருடங்களுக்கான மின் தேவையை கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.