தமிழக செய்திகள்

கொளத்தூர் தொகுதி நிலவரம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்தோம் - காதர் மொய்தீன்

ஒரு பெருங்கூட்டம் நடிகர் விஜய் முதலமைச்சராக வர வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்பார்த்தது ஒன்று, ஆனால் நடந்தது வேறு ஒன்று.

த.வெ.க. ஒவ்வொரு தொகுதிகளிலும் ஏதோ கொஞ்சம் ஓட்டுகளை வாங்குவர். பிரதான கட்சிகளின் ஓட்டு வங்கியை பிரிப்பார்கள் என பேசப்பட்டது.

தேர்தல் நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் தான் இருந்தோம். ஆனால் தமிழக மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்தனர். இதை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்பார்க்கவில்லை.

ஒரு பெருங்கூட்டம் நடிகர் விஜய் முதலமைச்சராக வர வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். த.வெ.க. ஆட்சி அமைக்க தி.மு.க. கூட்டணியில் இருந்த அனைத்து கூட்டணி கட்சிகளும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒப்புதலை பெற்றுதான் ஆதரவை தெரிவித்தோம்.

அ.தி.மு.க. ஆதரவுடன் திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என தி.மு.க. தரப்பில் யோசனை சொல்லப்பட்டது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க தி.மு.க. சார்பில் ஆதரவு தெரிவித்ததாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனால் தான் நாங்கள் த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுக்க தாமதம் ஏற்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி நிலவரம் எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டது. எங்கள் கட்சியை சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது அங்குள்ள பொதுமக்கள், பெண்களிடம் வேறுமாதிரியாக மாற்றம் இருப்பதாக உணர்ந்தனர். அவர்களுக்கே சந்தேகம் ஏற்பட்டது. தி.மு.க.விற்கு ஓட்டு போடுவார்களா என அவர்கள் சந்தேகம் எழுப்பினார்கள். இது குறித்து அப்பெண்கள் தி.மு.க. நிர்வாகிகளுடன் தெரிவித்துள்ளனர். எனக்கும் தகவல் தெரிவித்தனர்.

நான் இது குறித்து தி.மு.க. தலைமைக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இது அ.தி.மு.க.வை உடைப்பதாக தெரியவில்லை. இது குதிரை பேரம் இல்லை.

வருகிற இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை வருகிற 20-ந் தேதி கட்சி பொதுக்குழுவில் முடிவு செய்வோம்.

அந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.