கடந்த சில நாட்களாகவே ‘பிரதமர் வேட்பாளர்’ விவகாரத்தில் தமிழ்நாட்டின் கூட்டணிக் கட்சிகளான தவெக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ், பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் உறுதியாக உள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தால் காங்கிரஸ் உள்ளேயும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.
ஆனால் தவெகவினர் முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி பேசிவருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை.,
“ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் கூட்டணிக்கான வாய்ப்பு என்ன இருக்கிறது?” என கருத்து தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி பற்றி கருத்து சொல்ல செல்வப்பெருந்தகை யார் என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த கருத்துக்கு பதில்கூறும் வகையில் செல்வப்பெருந்தகை சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;
“கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர்.
வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது.
நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி?
அதற்கு நீண்ட நேரம் முதலமைச்சர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.
உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதலமைச்சராவது ஒரே ஒரு முறை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே.
முதலமைச்சர் கூட சொல்ல வேண்டாம். அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளவர்கள் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதலமைச்சரிடம் நமது அணியின் பிரதமர் வேட்பாளர் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவர் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன்.
பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதலமைச்சரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.
உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்.
காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்து போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்கிறது. காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது.
தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார்.
உரக்கச் சொல்கிறேன்.
நான் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.