சத்குருவின் ஈஷா அறக்கட்டளையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவான 'ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டிகள், தமிழ்நாட்டில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
இந்தாண்டு 10 மாநிலங்களைச் சேர்ந்த 40,000 கிராமங்களில் இருந்து 80,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளுக்கு மொத்தம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
ஈஷா கிராமோத்சவம்
நம் கிராமங்களில் 60 சதவீத மக்கள் உழைக்கும் வயதில் இருந்தாலும், வேலை வாய்ப்பின்மை மற்றும் நலிவடையும் விவசாயம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் வறுமைக்கும் போதைப்பழக்கத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். அதேபோல், பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு விளையாடுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது.
இந்தச் சூழலை மாற்றி, “கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்ற வேண்டும் என்ற சத்குருவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 'ஈஷா கிராமோத்சவம்' தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் அளவிலானப் போட்டிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. குறிப்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும், 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளன. மேலும் இரண்டாம் கட்ட மண்டல அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 3-ஆவது மற்றும் 4-ஆவது வார இறுதி நாட்களில் நடைபெறும்.
இந்த தொடர் கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகிய நிலைகளில் நடைபெறும். பிரம்மாண்ட இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறும்.
ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கு கைப்பந்து (வாலிபால்) போட்டிகளும், பெண்களுக்கு எறிபந்து (த்ரோபால்) போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு இதில் பங்கேற்க அனுமதி கிடையாது.
ஈஷா கிராமோத்சவம் 2026-இன் இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ,,ரூ.50,000-மும் வழங்கப்படும்.
இதுமட்டுமின்றி, கிளஸ்டர், டிவிஷனல் போட்டிகளிலும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுத் திருவிழாவில், கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
கடந்தாண்டு வரை தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே நடைபெற்ற வந்த ஈஷா கிராமோத்சவம் இந்தாண்டு வட மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களோடு இணைந்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடத்தப்படுகின்றன.
இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில், சுமார் 7,000 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 15,000 பெண்கள் உட்பட 80,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து ஈஷா கிராமோத்சவ ஒருங்கிணைப்பாளர் சுவாமி புலகா கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் ஈஷா கிராமோத்சவம் அளவிலும் தாக்கத்திலும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
கிராமப்புறங்களில் இருக்கும் திறமையான விளையாட்டு வீரர்களை அங்கீகரித்து கொண்டாடும் வாய்ப்பை கிராமோத்சவம் வழங்குகிறது. தகுதியுள்ள ஒவ்வொரு கிராம அணியையும் இதில் பங்கேற்று விளையாட்டின் மகிழ்ச்சி, தோழமை மற்றும் மாற்றும் சக்தியை அனுபவிக்க அழைக்கிறோம்.” எனக் கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளில், ஈஷா கிராமோத்சவம் தொடங்கியதில் இருந்து இன்று வரை, சுமார் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2.60 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஈஷா கிராமோத்சவம், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் 'தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பாக' அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய கலைகள், இசை, நடனம், கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் சுவையான கிராமப்புற உணவுக் கடைகள் எனப் பலவற்றையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து நடத்துவதன் மூலம், கிராமப்புற இந்தியாவின் செழுமையான கலாச்சாரத்தை ஈஷா கிராமோத்சவம் கொண்டாடுகிறது. கிராமோத்சவ திருவிழாவில் வள்ளி கும்மியாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளைக் கண்டு ரசிக்கலாம். அதோடு கோ-கோ, கிட்டிப்புள், கபடி போன்ற கிராமத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம்.
தனிநபர்களையும், சமூகங்களையும் வடிவமைப்பதில் விளையாட்டின் ஆழமான பங்களிப்பு பற்றி சத்குரு கூறுகையில், “வாழ்க்கையை விளையாட்டுத்தனத்தோடு (playful) எதிர்கொள்வதே நாம் வாழ்வதற்கான ஆகச்சிறந்த பொறுப்பான வழியாகும். எப்போதும் வாடிய முகத்தோடு இந்த பூமியில் உலா வருவது முற்றிலும் பொறுப்பற்ற செயல்.
வாழ்க்கையில் விளையாட்டுத்தனத்தோடு இருப்பது என்பது பொறுப்பான மற்றும் சரியான செயலாற்றும் நிலையில் இருப்பதைக் குறிக்கிறது. நீங்கள் எப்போது விளையாட்டுத்தனத்தோடு இருக்கிறீர்களோ, அப்போதுதான் உங்களால் எல்லாவற்றின் மீதும் முழு கவனம் செலுத்த முடியும். இந்த குணமிருந்தால் மட்டுமே, உலகில் நடக்கும் எல்லாவற்றிற்கும் உங்களால் உண்மையாக பதில்வினை ஆற்ற முடியும். இல்லையென்றால், வாழ்க்கையின் பாரமே உங்களை அழுத்திவிடும்." எனக் கூறியுள்ளார்.
கிராமப்புற முன்னேற்றம் மற்றும் அங்குள்ள விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட முன்னணி நிறுவனங்கள், இந்த ஈஷா கிராமோத்சவம் 2026-க்கு தங்களது ஆதரவை வழங்குகின்றன.
இதில் கிராஸ்ரூட் பார்ட்னராக பிரைம் வாலிபால் ‘சென்னை பிளிட்ஸ்’ அணி, மொபிலிட்டி பார்ட்னராக ‘கிராவ்டன் மோட்டார்ஸ்’, ஸ்போர்ட்ஸ் & எக்விப்மென்ட் பார்ட்னராக ‘நிவியா ஸ்போர்ட்ஸ்’, ஆதரவு பார்ட்னராக ‘டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ்’, ஆன்-கிரவுண்ட் சப்போர்ட் பார்ட்னராக ‘வொண்டர் சிமெண்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. சிஎஸ்ஆர் பார்ட்னர்களாக ‘சிஜி பவர்’, ‘வரீந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’, ‘ராயல் இன்ஃப்ரா கான்ஸ்ட்ரக்ஷன்’ மற்றும் ‘அகிலிசியம் கன்சல்டிங்’ ஆகிய நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன.
ஈஷா கிராமோத்சவம் 2026-க்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. தகுதியுள்ள கிராமப்புற வீரர்கள் ishagramotsavam.sadhguru.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, 83000 30999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.