சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த புதிய தலைமைச் செயலக வளாகம் சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில், கிட்டத்தட்ட 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
புதிய தலைமைச் செயலகம் அமைக்க சென்னை பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது. இருப்பினும் சென்னை பட்டினப்பாக்கம் செய்யப்பட்டதில் இருந்தே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டினப்பாக்கத்தைச் சுற்றி ஒன்பது மீனவக் கிராமங்கள் அமைந்துள்ளன. மேலும், 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
இதனிடையே, தங்கள் அடிப்படை வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தும் படகுகளை இறக்குவதற்கும், நிறுத்துவதற்கும், மீன்பிடி வலைகளைப் பழுதுபார்ப்பதற்கும், தாங்கள் பிடித்த மீன்களை விற்பதற்கும் கடற்கரைக்கான தடையற்ற அணுகலைச் சார்ந்துள்ளனர். இந்தச் சூழலில் அவர்களிடம் கலந்தாலோசிக்காமல், தவெக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மீனவ சமூகத்தின் குற்றம்சாட்டினர்.
தமிழ்நாட்டிற்கான புதிய தலைமைச் செயலகத்தை, சென்னை பட்டினப்பாக்கத்தில் கட்டுவது தொடர்பான தவெக அரசின் முடிவை எதிர்த்து, திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யக் கோரி, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் த.வேலு வழக்கு தாக்கல் செய்துள்ளார். விரைவில் இம்மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீனவ அமைப்புகள் தொடர் எதிர்ப்பு காரணமாக சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் முடிவை அரசு கைவிட முடிவு செய்துள்ளதாகவும், பட்டினப்பாக்கத்திற்கு மாற்றாக புதிய இடத்தை தேர்வு செய்து குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, சென்னை பல்லவன் இல்லத்தில் ஏறக்குறைய 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமை செயலகத்தை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சட்டசபை தவிர்த்து பிற நிர்வாக கட்டிடங்களை பல்லவன் இல்லத்தில் கட்டுவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றனர். இதனால் சட்டசபை மட்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய தலைமைச் செயலகத்திற்கு அரசு தற்போது ஆய்வு செய்து வரும் பல்லன் இல்லத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் பணிமனைகள் அமைந்துள்ளன. போக்குவரத்து பணிமனைகளுக்கு மாற்று இடம் வழங்கி பல்லவன் இல்லம் வளாகத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது.